சென்னை: புதுச்சேரியைச் சேர்ந்த ரவி என்பவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, காலாபேட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 2012ஆம் ஆண்டு அவருக்கு ஆறு நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. அப்போது தப்பித்து தலைமறைவான அவர், 326 நாட்களுக்குப் பின் கைது செய்யப்பட்டார்.
பரோல் முடிந்த பின் மீண்டும் சரணடையாதது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு 2003ஆம் ஆண்டு முதல் 21 ஆண்டுகளாக சிறையில் உள்ள அவர், தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையை நிறைவு செய்த நிலையில், முன்கூட்டி விடுதலை கோரி அளித்த மனுவை நிராகரித்து, புதுச்சேரி சிறைகள் தலைமைக் கண்காணிப்பாளர் 2024 ஜனவரி மாதம் உத்தரவு பிறப்பித்ததாகவும், அந்த உத்தரவை ரத்து செய்து, தன்னை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பரோல் காலத்தில் தப்பித்ததற்காக விதிக்கப்பட்ட ஓராண்டு சிறைத் தண்டனையையும் நிறைவு செய்துள்ள நிலையில், அதை காரணம் காட்டி, முன்கூட்டி விடுதலை செய்ய மறுப்பது தவறு என ரவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இளங்கோவன் வாதிட்டார்.
இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுதாரரை முன்கூட்டி விடுதலை செய்யலாம் என நன்னடத்தை அதிகாரி பரிந்துரை அளித்துள்ள நிலையில், பரோல் காலத்தில் தப்பிச் சென்றார் என்பதற்காக முன்கூட்டி விடுதலை மறுக்க முடியாது எனக் கூறி, அவரை உடனடியாக விடுதலை செய்யும்படி, புதுச்சேரி சிறைத்துறை தலைமை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டனர்.