'ஏஞ்சல்' பட வழக்கு; உதயநிதியின் மனுவுக்கு பதிலளிக்க தயாரிப்பு நிறுவனத்துக்கு உத்தரவு! - ANGEL MOVIE UDHAYANIDHI CASE - ANGEL MOVIE UDHAYANIDHI CASE
ANGEL MOVIE UDHAYANIDHI CASE: 'ஏஞ்சல்' படப்பிடிப்புக்கு உதயநிதி ஸ்டாலின் ஒத்துழைக்கவில்லை எனக்கூறி தொடரப்பட்ட வழக்கை நிராகரிக்க கோரி, உதயநிதி தரப்பில் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Published : Sep 9, 2024, 3:27 PM IST
சென்னை: ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் தாக்கல் செய்த மனுவில், உதயநிதி நாயகனாக நடிக்க, நாயகிகளாக நடிகைகள் ஆனந்தி, பாயல் ராஜ்புத் மற்றும் யோகிபாபு நடிக்க, இயக்குனர் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில், ஏஞ்சல் என்ற படத்தை தயாரிக்க முடிவு எடுக்கப்பட்டு. அதன்படி 2018ஆம் ஆண்டு படப்பிடிப்பு துவங்கியதாகவும், 80 சதவீதம் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக கூறியுள்ளார்.
மேலும் இருபது சதவீதம் படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ள சூழலில், ஏஞ்சல் படத்தை நிறைவு செய்யாமல், மாமன்னன் படத்தில் நடித்த உதயநிதி, அந்த படமே தனது கடைசி படம் என அறிவித்திருந்தார். ஏஞ்சல் படத்திற்காக இதுவரை 13 கோடி ரூபாய் செலவிட்டுள்ள நிலையில், ஒப்பந்தப்படி, இன்னும் எட்டு நாட்கள் கால்ஷீட் தராமல் உதயநிதி புறக்கணித்து வருவதால், ஏஞ்சல் படத்தின் எஞ்சிய படப்பிடிப்பை நிறைவு செய்து தர வேண்டுமெனவும், காலதாமதத்திற்காக 25 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் எனக் கோரி உதயநிதி ஸ்டாலின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று இந்த மனுவை விசாரித்த நீதிபதி டீக்காராமன், வழக்கை நிராகரிக்க கோரி உதயநிதி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணனுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 23ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: நாளை பிறந்தநாள்.. இன்று விவாகரத்து.. ஜெயம்ரவி கொடுத்த ஷாக்!