சென்னை: வருமானத்துக்கு அதிகமாக 3 கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக சிபிஐ பதிவு செய்த வழக்கில், புதுச்சேரி முன்னாள் எம்எல்ஏ அசோக் ஆனந்த் உள்ளிட்டோருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து புதுச்சேரி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2018ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.
பின்னர், இந்த தீர்ப்பை எதிர்த்து முன்னாள் எம்எல்ஏ தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. அதேபோல், சிபிஐ வழக்கு அடிப்படையில் அமலாக்கத்துறையும் தனியாக பதிவு செய்த வழக்கு, புதுச்சேரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இதையும் படிங்க: தீட்சிதர் விவகாரத்தில் அறநிலையத் துறை எப்படி தலையிட முடியும்? ஐகோர்ட் கேள்வி!
இந்நிலையில், சிபிஐ வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்த மேல்முறையீடு நிலுவையில் உள்ளதால், அமலாக்கத்துறை வழக்கு விசாரணையை தள்ளிவைக்கக் கோரி முன்னாள் எம்எல்ஏ அசோக் ஆனந்த் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்று, புதுச்சேரி முதன்மை அமர்வு நீதிமன்றம், அமலாக்கத்துறை வழக்கை தள்ளிவைத்து உத்தரவிட்டது.
இதனையடுத்து, இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த மனுவை திங்கள்கிழமை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் மரியா கிளெட் அமர்வு, மேல் முறையீட்டு வழக்கு நிலுவையில் இருப்பதால், அமலாக்கத்துறை வழக்கு விசாரணையை நடத்த எந்த தடையும் இல்லை எனக் கூறி, அமலாக்கத்துறை வழக்கு விசாரணையை தள்ளிவைத்த உத்தரவை ரத்து செய்தது. மேலும், வழக்கு விசாரணையை தொடர்ந்து நடத்த புதுச்சேரி நீதிமன்றத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.