சென்னை: பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு விடுதியில் டேக்வாண்டோ பயிற்சியாளராக பணியாற்றிய தர்மராஜன் மீது, பாலியல் தொல்லை கொடுத்ததாக பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு மூன்று மாணவிகள் புகார் அளித்தனர்.
இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்த பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையம், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தது. இந்நிலையில், டேக்வாண்டோ பயிற்சியாளர் தர்மராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், தன்மீதான மாணவிகளின் பாலியல் வன்கொடுமை புகாரை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. பயிற்சியாளர் தரப்பில் வழக்கறிஞர் விவேகானந்தன் ஆஜராகி வாதம் செய்தார். அப்போது நீதிபதி மாணவிகளிடம் தனித்தனியாக நேரில் விசாரணை செய்தார்.
அப்போது மாணவிகள் கூறுகையில், "வெளியில் இருந்து வந்த அரவிந்த் மற்றும் பிரதீப் ஆகிய இருவருக்கும் பயிற்சியாளர் தர்மராஜன் மீதுள்ள தனிப்பட்ட விரோதம் காரணமாக, எங்களை பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சொன்னார்கள்.
அதன்படி, அரவிந்த் மற்றும் பிரதீப் ஆகிய இருவரின் கட்டாயத்தால் காவல் நிலையத்தில் புகார் அளித்தாகவும், பயிற்சியாளர் தர்மராஜன் தவறாக நடந்து கொள்ளவில்லை என்றும் விசாரணையில் மாணவிகள் தெரிவித்தனர்". மாணவிகளின் வாக்குமூலத்தின் படி, பயிற்சியாளர் மீது போடப்பட்ட போக்சோ வழக்கை நீதிபதி ரத்து செய்தார்.
பின்னர், போலியாக மாணவிகளை புகார் அளிக்கத் தூண்டிய அரவிந்த் மற்றும் பிரதீப் ஆகியோர் மீது குற்ற வழக்குப்பதிவு செய்து 4 வாரத்தில் விசாரணையை முடித்து போக்சோ நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க: நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் கறுப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்!