சென்னை: புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் நடந்த முறைகேடு தொடர்பான லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை வாபஸ் பெற அனுமதி அளிக்கும் படி அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற எதிர்ப்பு தெரிவித்து அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், கடந்த 2006-11ம் ஆண்டுகளில் திமுக ஆட்சி காலத்தில், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது.
இந்த புதிய தலைமைச் செயலகத்தை கட்டியதில் நடந்த முறைகேடு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ரகுபதி ஆணையத்தை கலைத்த சென்னை உயர் நீதிமன்றம், ஆணையம் சேகரித்த ஆதாரங்களில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் கடந்த அதிமுக அரசு, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்தது. அரசின் உத்தரவை எதிர்த்து திமுக பொருளாளராக இருந்த ஸ்டாலின், துரைமுருகன் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம், அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து அதிமுக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை ஆட்சி மாற்றத்திற்கு பிறகு திமுக தலைமையிலான அரசு மேல்முறையீட்டு மனுவை திரும்பப் பெற அரசு முடிவு செய்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தன்னை இந்த வழக்கில் இணைக்கக் கோரி, அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் குமரேஷ் பாபு அமர்வு, அனைத்து தரப்பு வாதங்களுக்கு பின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் இன்று (மார்ச் 28) தீர்ப்பளித்த நீதிபதிகள், வழக்கை தொடர்ந்து நடத்துவது அரசின் தனிப்பட்ட முடிவு. அதனால், வழக்கை தொடர்ந்து நடத்தும் படி நீதிமன்றம் அரசை நிர்ப்பந்திக்க முடியாது.
அரசு மேல்முறையீட்டு வழக்கை வாபஸ் பெற அனுமதியளித்து வழக்கை தள்ளுபடி செய்தனர். மேலும், வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் ஜெயவர்தன் மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கத் தேவையில்லை வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க: அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் இந்தாண்டு முதல் கவுன்சிலிங் முறையில் மாணவர் சேர்க்கை! - Aided College Admission