சென்னை: சவுக்கு சங்கர் மீது பெண் காவலர்களை அவதூறாக பேசுதல் மற்றும் அரசுக்கு எதிராக அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக தமிழகம் முழுவதும் 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில் குண்டர் சட்டத்தில் அடைக்க சென்னை காவல்துறை ஆணையர் மே 12-ஆம் தேதி உத்தரவிட்டார். இதையடுத்து குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரிய சவுக்கு சங்கர் தாய் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் சிவஞானம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, சவுக்கு சங்கர் தரப்பில், அவசரகதியில் குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. ஒரே பேட்டியை மையமாக வைத்து குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. அரசுக்கு எதிராக தொடர்ந்து அவதூறான கருத்துக்களை பரப்பி வந்தார் என வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அரசு தரப்பில், "அனைத்து பெண் காவலர்களையும் சவுக்கு சங்கர் தவறாக கருத்து தெரிவித்துள்ளார். அரசுக்கு எதிராக அவதூறாக பேசக்கூடாது என கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் அறிவுறுத்தப்பட்டது. ஆனாலும், தொடர்ந்து அரசுக்கு எதிராக பேசியதால், குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது" என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், "யூடியூப்களில் கருத்து தெரிவிக்கும் அனைவரும் கைது செய்யப்படுகிறார்களா? இதுவரை எத்தனை பேர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். வீடியோ வெளியிட்டதால், மக்கள் பாதிக்கப்பட்டார்கள் என எந்த அடிப்படையில் அரசு முடிவுக்கு வந்தது?. யூடியூப்களில் வெளியிடப்படும் கருத்துக்களை நம்புவது மக்களின் தனிப்பட்ட விருப்பம். அது சரியாக இருந்தால் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். நல்ல எண்ணம் கொண்டவர்கள் நல்ல வீடியோக்களை பார்ப்பார்கள், தவறான எண்ணம் கொண்டவர்கள் தவறான வீடியோக்களை பார்ப்பார்கள். அதனால், எந்த வீடியோவை பார்க்க வேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்த முடியாது"
நீதிமன்றம் சரமாரி கேள்வி: "தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் செய்திகள் அனைத்தும் உண்மையா? தொலைக்காட்சி சார்ந்த கட்சிகளுக்கு தானே சாதகமாக நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. அதை ஏன் கேட்க முடிவதில்லை? திரைப்படங்களில் ஏன் அரிவாள் கத்திகளுடன் காட்சிகள் வெளியிடுகின்றன. சமுதாயத்திற்கு தேவையான தத்துவத்தையா? காட்சிப்படுத்துகின்றன"
"ரவுடிகளின் மொழியில் பாடம் கற்பிக்கப்படுவார்கள் என சென்னை காவல்துறை ஆணையர் கருத்து தெரிவித்ததை தவறாகவும் எடுத்துக் கொள்ளலாம். அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கும் நீதிபதிகளை போற்றுவதும், எதிராக தீர்ப்பு வழங்கும் நீதிபதியை தூற்றுவதும் வாடிக்கையானது. அதற்காக நடவடிக்கை எடுக்க முடியாது. அனைவருமே சமூக வளைதளங்களில் தவறாக பேசக்கூடாது என அறிவுறுத்த மட்டுமே முடியும். யாருடைய பேச்சு சுதந்திரத்திலும் தலையிட முடியாது"
அரசு அலுவலகங்களில் ஊழல் இல்லையா?: "அரசுக்கு எதிரான பதிவிடப்படும் வீடியோக்களை மக்கள் பார்க்கிறார்கள் என்றால், ஊழல் அதிகரித்துள்ளது என்பதே அர்த்தம். அரசு அலுவலகங்களில் ஊழல் என்பது இல்லையா? உச்சநீதிமன்ற நீதிபதிகளே நீதிமன்றங்களில் ஊழல் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதை மறுக்க முடியுமா? சவுக்கு சங்கருக்கு தகவல்கள் கொடுப்பது யார்? அதை ஏன் விசாரணை செய்யவில்லை" என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் கடந்த 06 -ஆம் தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், போதிய காரணங்கள் இல்லாமல் அவசரகதியில் சவுக்கு சங்கருக்கு மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.
சிறையில் இருந்து வெளியே வருவதில் சிக்கல்: சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டாலும், சிறையில் இருந்து வெளியே வர முடியாது. அவர்மீது போடப்பட்ட 17 வழக்குகளில் இதுவரை 10 வழக்குகளில் மட்டுமே காவல்துறை கைது செய்துள்ளனர். மற்ற வழக்குகள் இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை. வழக்குகளை ரத்து செய்யக்கோரிய வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலைவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கோயிலுக்கு சேதம் ஏற்படாத வகையில் மெட்ரோ பணிகளை மேற்கொள்ள வேண்டும் - ஐகோர்ட் உத்தரவு!