சென்னை: இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் நடத்திய நுழைவுத் தேர்வுக்கு, தடைவிதிக்க கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மாணவன் எஸ்.சித்தார்த் சார்பில் அவரது தந்தை எம்.சதீஷ்குமார் தாக்கல் செய்துள்ள மனுவில், இந்தியாவில் கடல்சார் கல்விக்காக 160 கல்வி நிலையங்களில், தமிழ்நாட்டில் மட்டும் 15 கல்வி நிலையங்கள் உள்ளதாக கூறியுள்ளார்.
இந்த படிப்புகளில் தமிழகத்தில் 3 ஆயிரம் இடங்களும், நாடு முழுவதும் 7,000 இடங்களும் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி, பிடெக் மெரைன் இன்ஜினியர், பிஎஸ்சி நாட்டிக்கல் சயின்ஸ் ஆகிய படிப்புகளுக்கு வெளியான அறிவிப்பு விளம்பரத்தில் முழு தகவல்களும் இல்லாமல் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். இதனால் மாணவர்கள், குறிப்பாக ஏழை மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், எப்படி விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது என்பது குறித்த தெளிவான தகவல்கள் அந்த அறிவிப்பில் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்வாறு வேண்டுமென்றே அடித்தட்டு ஏழை மாணவர்கள், இந்த படிப்பில் சேர்ந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளனர். அதனால்தான் திடீரென்று ஜூன் 8ஆம் தேதி தேர்வு நடைபெறும் என்றும், தேர்வு கம்யூட்டர் மூலம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் மூலம் இந்த தேர்வு நடத்தப்பட்டுள்ளதால் இது கிராமப்புற மாணவர்கள் மற்றும் ஏழை மாணவர்களால் சாத்தியமானதாக இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த தேர்வில் 47 ஆயிரம் பேர் கலந்து கொண்ட நிலையில், இவர்களில் தோராயமாக 14 பேரின் ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளதாகவும், எனவே இது விதிமுறைகளுக்கு முரணாக நடத்தப்பட்டுள்ள கடல்சார் கல்விக்கான பொது நுழைவுத் தேர்வாகும். அதனால் கடந்த 8ஆம் தேதி நடந்த இந்த நுழைவுத் தேர்வை ரத்து செய்து, உரிய வழிமுறைகளை அமைத்து தேர்வை நடத்துமாறு, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்நிலையில், இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஜோதி ஆஜராகி, தமிழக மாணவர்களுக்கு கடல்சார் படிப்புகளில் வாய்ப்பு கிடைத்துவிடக்கூடாது என்ற நோக்கத்திலேயே இந்த தேர்வு நடத்தப்பட்டுள்ளது என்று வாதிட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் இதுகுறித்து பதிலளிக்க உத்தரவிட்டு, தேதி குறிப்பிடாமல் விசாரணையை ஒத்திவைத்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: பாலியல் தொழிலில் சிறுமி.. கஸ்டமராக சென்ற கோயில் பூசாரி! சகோதரி உட்பட 6 பேர் கைது