சென்னை: கள்ளக்குறிச்சி அடுத்த கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 66 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி விசாரணையில் முன்னேற்றம் இல்லாததாகக் கூறி, வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என அதிமுக சார்பில் வழக்கறிஞர் இன்பதுரை, பாமக வழக்கறிஞர் கே.பாலு, தேமுதிக முன்னாள் எம்எல்ஏ பார்த்தசாரதி, அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஸ்ரீதரன், பாஜக வழக்கறிஞர் மோகன்தாஸ் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, அரசு சார்பில், சிபிசிஐடி விசாரணை முறையாக நடைபெற்று வரும் நிலையில் சிபிஐக்கு மாற்ற அவசியம் இல்லை என்றும், கள்ளச்சாராயத்தை ஒடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், புதிதாக வழக்கு தொடர்ந்தவர்களுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை ஏற்று விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.
இந்த நிலையில், வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், நீதிபதி குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் முன்பு இன்று (புதன்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், இடைக்கால அறிக்கை தாக்கல் செய்தார்.
மேலும், இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், காவல்துறை விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர்கள் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு இறுதி விசாரணைக்காக வழக்கை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: "கல்வராயன் மலைப் பகுதிக்கு தமிழக முதல்வர் செல்ல வேண்டும்" - சென்னை உயர் நீதிமன்றம் கருத்து!