திருவண்ணாமலை: சிவப்பெருமானின் பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றாக கருதப்படும் திருவண்ணாமலை, ஆன்மிக சிறப்புமிக்க இடமாக திகழ்கிறது. மாதந்தோறும் பெளர்ணமி நாளில் இங்கு நடைபெறும் கிரிவலமும், கார்த்திகை தீப திருவிழா உலக அளவில் பிரசித்தி பெற்றது.
திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி, கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. குறிப்பாக ஜவ்வாது மலை, ஏலகிரி மலைகளின் சில பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. குறிப்பாகப் பெருமளவு கிராமங்களைக் கொண்ட தொகுதியாக உள்ளது.
தொகுதி மறுசீரமைப்புக்கு முன், பின்: 2008 ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்குப்பின், திருப்பத்தூர் மக்களவைத் தொகுதி திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியாக மாற்றப்பட்டது. தொகுதி மறுசீரமைப்புக்கு முன் 1977ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற திருப்பத்தூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் திமுக 6 முறையும் காங்கிரஸ் கட்சி 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது.
தொகுதி மறுசீரமைப்புக்கு பின், திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற தேர்தல்களில், 2009 மற்றும் 2019 என இரண்டு முறை திமுகவும்,2014ல் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன.
2019 தேர்தல் நிலவரம்: 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது, திருவண்ணாமலை தொகுதியில் மொத்தம் 14,70,203 மொத்தம் வாக்காளர் இருந்தனர். இவர்களில் 7,27,136 ஆண் வேட்பாளர்களும், 7,42,990 பெண் வேட்பாளர்களும் மற்றும் 77 மூன்றாம் பாலினத்தவர் இருந்தனர். அத்தேர்தலில் 11,39,412 மொத்த வாக்குகள் பதிவாகின. மொத்த வாக்குப்பதிவு சதவீதம் 77.50.
இதில், முக்கிய கட்சிகளான திமுகவை சேர்ந்த சி.என்.அண்ணாதுரை 6,66,272 வாக்குகளும், அதிமுகவை சேர்ந்த எஸ்.எஸ்.அக்ரி கிருஷ்ணமூர்த்தி 3,62,085 வாக்குகளும் பெற்றனர். நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ஆர்.ரமேஷ்பாபு 27,503 வாக்குகளும், மக்கள் நீதி மய்யத்தை சேர்ந்த ஆர்.அருள் 14,654 வாக்குகளும் பெற்றனர். இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை 3,04,187 அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
2024 தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்: அண்மையில் நடைபெற்று முடிந்த 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், இத்தொகுதியில் மொத்தமுள்ள 15,33,099 வாக்காளர்களில் (7,54,533 ஆண் வாக்காளர்கள், 7,78,445 பெண் வாக்காளர்கள் மற்றும் 121 மூன்றாம் பாலினத்தவர்) 11,38,102 பேர் வாக்குகளித்துள்ளனர். மொத்த வாக்குப்பதிவு சதவீதம் 74.24. இந்த தேர்தலில் திமுக சார்பில் மீண்டும் அண்ணாதுரையும், அதிமுக சார்பாக கலியபெருமாளும், பாஜக சார்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக ரா.ரமேஷ்பாபு ஆகியோர் களத்தில் உள்ளனர்.
நடந்து சென்று வாக்கு சேகரித்த முதல்வர்: திமுக வேட்பாளர் சி.என் அண்ணாதுரைக்கு ஆதரவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேரடி வீதி கடலை கடை மூலையிலிருந்து காந்தி சிலை வரையிலும் நடந்து சென்று பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் துண்டுப் பிரசுரம் வழங்கி வாக்கு சேகரித்தார். டீ கடையில் அமர்ந்து டீ குடித்தும் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது களத்தில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.
பொதுக் கூட்டம்: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக வேட்பாளர் கலியப்பெருமாளை ஆதரித்து பிரச்சார பொதுக் கூட்டம் நடத்தினார்.
பஞ்ச் டயலாக்: பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமனை ஆதரித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், திருவண்ணாமலையில் ரோட் ஷோ மேற்கொண்டு வாக்கு சேகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல், திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் டீ கடைக்கு சென்ற காமெடி நடிகர் கூல் சுரேஷ், அங்கு வாடிக்கையாளர்களுக்கு டீ போட்டுக் கொடுத்து வாக்குகள் சேகரித்தார். அத்துடன் "ஜாடிக்கேத்த மூடி, அது நம்ம மோடி" என்று பஞ்ச் டயலாக் பேசியும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.
வெற்றி யாருக்கு?: திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் திமுக செல்வாக்கு இருப்பதாக தெரிந்தாலும், அதிமுக, பாமக ஆகிய கட்சிகளுக்கும் இங்கு குறிப்பிடத்தக்க வாக்கு வங்கி உள்ளது. எனவே இம்முறை இங்கு திமுக, அதிமுக, பாஜக என மும்முனைப் போட்டி நிலவுகிறது. கடுமையான இப்போட்டியில் வெற்றிப்பெற போவது யார்? என்ற கேள்விக்கான விடை ஜுன் 4 ஆம் தேதி தெரியவரும்.
இதையும் படிங்க: தேர்தல் 2024: நெல்லையில் அதிமுக, காங்கிரஸ், பாஜக மும்முனை மோதலில் வெற்றி யாருக்கு? - Tirunelveli Lok Sabha Election 2024