திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த பழைய வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் அதே பகுதியில் உள்ள அவருக்கு சொந்தமான நிலத்தில் ஒருங்கிணைந்த பண்ணை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு பண்ணையில் புகுந்த சிறுத்தை, பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆடுகளை கடித்து குதறியுள்ளது. இதில் 8 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.
ஆடுகள் உயிரிழந்துள்ளதை இன்று காலை கண்ட ராஜேஷ், இதுகுறித்து வாணியம்பாடி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் காலடித்தடத்தை வைத்து சிறுத்தை ஆடுகளை கடித்து கொன்றது தெரியவந்தது.
இதனையடுத்து வனத்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், கடந்த மாதம் திருப்பத்தூர் நகர் பகுதியில் புகுந்த சிறுத்தையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து, வாணியம்பாடி அருகே உள்ள தமிழ்நாடு - ஆந்திர எல்லைப் பகுதியான மாதகடப்பா பகுதியில் வனத்துறையினர் சிறுத்தையை விட்டுள்ளனர்.
இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சின்னபள்ளிகுப்பம் பகுதியில் சிறுத்தையை கண்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்த நிலையில், இன்று வாணியம்பாடியில் உள்ள நிலத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆடுகளை சிறுத்தை கடித்து குதறிக் கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மாமியாரை கொலை செய்த மருமகள் - பேரன் கைது.. வாணியம்பாடியில் பயங்கரம்! - TIRUPAThUR OLD LADY MURDER