நாகப்பட்டினம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினரும் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான எம்.செல்வராஜ் உடல்நலக் குறைவு காரணமாகக் கடந்த 3-ம் தேதி சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சிறுநீரகம் மற்றும் இதய பிரச்சினையால் பாதிக்கப்பட்டு வந்த செல்வராஜுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று அதிகாலை காலமானார். இவரது மறைவுக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள், முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில், செல்வராஜின் உடல் அவரது சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள சித்தமல்லி கிராமத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இந்நிலையில், அவரது வீட்டின் பின்புறத்தில் உள்ள தோட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இன்று (மே 14) நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
யார் இந்த எம்.பி செலவராஜ்?: திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியத்தில் உள்ள கப்பலுடையான் கிராமத்தில் 1957ஆம் ஆண்டு எம்.செல்வராஜ் பிறந்தார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளராக பணியாற்றினார்.
பின்னர், 1989 மக்களவை தேர்தலில் போட்டியிட்டு நாகப்பட்டினம் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1996, 1998 நடத்தப்பட்ட மக்களவை தேர்தல்களில் நாகை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 6 முறை மக்களவை தேர்தலில் போட்டியிட்டு 3 முறை வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கரோனா காலகட்டத்தில் கரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார்.