திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி பிரசாந்த் மற்றும் துளசிராமன். கட்டிடத் தொழிலாளியான இவர்கள், ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட மாங்காய்தோப்பு பகுதியில் ஜூலிட் மேரி என்பவருக்குச் சொந்தமான வீட்டின் மேல்மாடியில் கான்கிரீட் மேல் தளத்தில் கட்டிடப் பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.
அப்போது ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக மேல்தளத்தில் இருந்த கான்கிரீட் சுவர் எதிர்பாராத விதமாக பெயர்ந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் ஜோதி பிரசாந்த் மற்றும் துளசிராமன் இடிபாடுகளில் சிக்கிய நிலையில், ஜோதி பிரசாந்திற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், படுகாயமடைந்த துளசி ராமனை மீட்ட அப்பகுதியினர் அவரை சிகிச்சையிக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் துளசிராமனை மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து இந்நிகழ்வு குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் நகர காவல்துறையினர் ஜோதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், உயிரிழந்த ஜோதி பிரசாந்தின் இரண்டு கண்களை அவரது குடும்பத்தினர் தானமாக வழங்கினர். மேலும் கட்டிட பணிக்கு வந்த கூலித்தொழிலாளி சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்து, அவரது கண்கள் தானமாக வழங்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தருமபுரி அருகே தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்; பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 40 பேர் படுகாயம்!