தஞ்சாவூர்: செவப்பநாயக்கன் வாரியைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவர் தெற்கு அலங்கத்தில் பாத்திரக்கடை நடத்தி வந்துள்ளார். கடந்த 2013ஆம் ஆண்டு தொழில் உரிமம் மற்றும் மின்னனு இயந்திர தராசை புதுப்பித்து முத்திரை பெறுவதற்காக தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் விண்ணப்பம் செய்துள்ளார்.
அப்போது தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளராக பணிபுரிந்த ஜெயலெட்சுமி (64), தொழில் உரிமம் மற்றும் இயந்திர தராசை புதுப்பித்து முத்திரை வைத்துத்தர ரூ.2 ஆயிரத்து 500 லஞ்சமாக கேட்டுள்ளார். ஆனால், லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத அந்தோணிசாமி, இது குறித்து தஞ்சாவூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர் ஜெயலெட்சுமி லஞ்சம் வாங்கியபோது கையும், களவுமாக பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கு கும்பகோணம் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி சண்முகப்பிரியா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்சம் வாங்கிய ஜெயலெட்சுமிக்கு ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 7-ன் கீழ் மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம் மற்றும் பிரிவு 13(1)(d), 13(2)-ன் கீழ் ஒரு வருட கடுங்காவல் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து, சிறைத் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கை தஞ்சாவூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை சார்பாக, காவல் துணைக் கண்காணிப்பாளர் நந்தகோபால் மேற்பார்வையில், அரசு கூடுதல் வழக்கறிஞர் முகம்மது இஸ்மாயில், காவல் ஆய்வாளர் அருண்பிரசாத் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் அய்யப்பன் ஆகியோர் நடத்தி சிறைத் தண்டனை பெற்றுத் தந்துள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: பிரெஞ்சு இருக்கும்போது இந்தி சொல்லிக் கொடுக்காதது ஏன்? - பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தனுக்கு மேயர் பிரியா பதில்!