சேலம்: பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம், சேலத்தில் இன்று (ஏப்.25) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், "ஜாபர் சாதிக்கின் கைதுக்குப் பிறகு, போதைப்பொருட்கள் விற்பனை கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாகத் தெரியலாம். ஆனால், பள்ளி, கல்லூரிகள் மற்றும் கோயில்கள் அருகாமையில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள பகுதிகள் உள்பட தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் சர்வ சாதாரணமாக போதைப்பொருட்கள் விற்பனையாகிறது.
இன்னும் சொல்லப்போனால், கிராமங்களில் உள்ள சந்தைகளில் கூட அதிகாலை 4 மணி முதல் போதைப்பொருள் விற்பனை நடைபெற்று வருகிறது. காய்கறியினை வாங்கிக்கொண்டு வெளியே வரும்போது, கஞ்சா பொட்டலம் வாங்கிச் செல்லும் சூழ்நிலை தமிழ்நாட்டில் நிலவிவருகிறது.
இதைக் கட்டுப்படுத்த வேண்டியது காவல்துறையை கையில் வைத்துள்ள முதலமைச்சர். ஆனால், இன்றைய சூழலில், அவரது கையில் ஆட்சி இருக்கிறதா? அவரது கட்டுப்பாட்டில் காவல்துறை உள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது.
ஏனென்றால், தன்னுடைய குடும்பத்தைச் சார்ந்தவர்களே இந்த போதைப்பொருள்கள் விற்பனையில் ஈடுபட்டுள்ள நபர்களிடம் தொடர்பில் உள்ளனர். மேலும், அவர்கள் பைனான்சியர்களாக இருந்துகொண்டு திரைப்படம் எடுப்பது, பல நிறுவனங்களிடம் இருந்து நிதி பெறுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் காலம் என்பதால், இது குறித்த நடவடிக்கைகள் தாமதமாக நடைபெறுகிறது. ஆனால், தேர்தல் முடிந்த பிறகு நடவடிக்கைகள் வேகமடையும். அப்போதுதான் இவர்களது உண்மை முகம் வெளியே தெரியவரும். ஆனால், அதற்குள்ளாக நாடு சீரழிந்துவிடும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புடைய கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல்!