சென்னை: கேளம்பாக்கம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அன்புராஜ் நோட்டு போட்டு லாரி ஓட்டுநர்களிடம் மாமுல் வசூலித்ததாக, தாம்பரம் காவல் ஆணையர் போக்குவரத்து ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட கேளம்பாக்கம் - வண்டலூர் சாலை நல்லம்பாக்கம் பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்து போலீசார் ஆவணங்களை சரி பார்த்து வருகின்றனர். இந்நிலையில், கேளம்பாக்கம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அன்புராஜ், அவ்வழியில் வரும் கனரக வாகனங்களை மடக்கி மாமுல் வேட்டையில் அதிகளவு ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
புகாரைத் தொடர்ந்து வழக்கம்போல் கேளம்பாக்கம் - வண்டலூர் பிரதான சாலையில், நல்லம்பாக்கம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக வந்த லாரி ஓட்டுநர்களிடம் மாமுல் பெற்றுக் கொண்டு அதை அவரது வாகனத்தில் வைத்திருந்த மாமுல் டைரியில் எழுதி வைத்துள்ளது வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவியதையடுத்து, தாம்பரம் காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக், கேளம்பாக்கம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அன்புராஜிடம் துறை ரீதியான விசாரணை நடத்த உயர் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து, உயர் காவல்துறை அதிகாரிகள், கேளம்பாக்கம் போக்குவரத்து ஆய்வாளர் அன்புராஜிடம் விசாரணை நடத்தியதில், லாரி ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்களிடமிருந்து மாமுல் வாங்கியது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, தாம்பரம் காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக், போக்குவரத்து காவல் ஆய்வாளர் அன்புராஜை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: கூலி தொழிலாளியின் மனைவியின் பெயரில் நடந்த ரூ.4.46 கோடி வரிஏய்ப்பு மோசடி.. ஆம்பூரில் நடந்தது என்ன? - Tax Evasion Scam