கரூர்: கரூர் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் சிவசக்தி மகாலில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர் ஜெயக்குமார் தலைமையில் வீரியம் பாளையம் தெய்வேந்திரன் கிரானைட் கல் குவாரி அமைப்பதற்கான கருத்துக் கேட்பு கூட்டம் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன், சட்டவிராத கல்குவாரி எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சண்முகம், காவேரி ஆறு பாதுகாப்பிற்கு ஒருங்கிணைப்பாளர் விஜயன் உள்ளிட்ட பொதுமக்கள், கிரானைட் கல் குவாரியால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கருத்துக்களை பதிவு செய்தனர்.
இதையும் படிங்க: திண்டுக்கல்லில் 17 வயது சிறுமி மீது துப்பாக்கி சூடு.. காதலன் வெறிச்செயல்..! பகீர் பின்னணி..!
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முகிலன் கூறுகையில், “இன்று கிருஷ்ணராயபுரம் வட்டம் வீரியம்பாளையம் பகுதியில் தெய்வேந்திரன் கிரானைட் கல்குவாரி துவங்குவதற்கான கருத்துக்கு ஏற்ப கூட்டத்தில் அனுமதி வழங்கக் கூடாது என கருத்துக்களை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
கல்குவாரிக்கு கிராம நிர்வாக அதிகாரி வழங்கிய சான்றில் 300 மீட்டர் தொலைவில் குடியிருப்பு பகுதிகள் இல்லை, உயர்மின் கோபுரம் இல்லை, வழிபாட்டுதளங்கள் இல்லை என சான்று வழங்கி உள்ளார். ஆனால் 38 வீடுகள் அடங்கிய பட்டியிலின இன மக்கள் குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. 200 மீட்டர் தூரத்தில் பெருமாள் கோயில் ஒன்று உள்ளது. வடகிழக்கு மற்றும் தென் மேற்கு பகுதியில் குடியிருப்புகள் அருகாமையில் உள்ளது.
இதையெல்லாம், மறைத்து கடந்த ஜூலை மாதம் கிராம நிர்வாக அதிகாரி சான்று வழங்கியுள்ளார். கிராம நிர்வாக அதிகாரி திட்ட வடிவமைப்பாளர் மற்றும் குவாரி உரிமையாளர் மீது அரசு கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சட்டப்படி தெய்வேந்திரன் கிரானைட் கல் குவாரிக்கு அனுமதி வழங்கக் கூடாது.
சென்னையில் உள்ள தமிழ்நாடு சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழு, குவாரி ஒன்றுக்கு, ஒன்றரை லட்சம் வரை லஞ்ச பணமாக பெற்றுக்கொண்டு அனுமதி வழங்கிவாதாக குவாரி உரிமையாளர் சங்கத்தினர் கூறியுள்ளது கவனிக்கத்தக்கது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் வருகிற செப்.19ஆம் தேதி சென்னையில் உள்ள தமிழ்நாடு சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழு அலுவலகம் உள்ள பனகல் மாளிகை முன்பு ’தொடர் காத்திருப்பு போராட்டம்’ நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது" எ்ன்ற முகிலன் கூறினார்.