கரூர்: கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் 30க்கும் மேற்பட்டோர் சக பெண் ஊழியர் ராஜசேகரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து நேற்று (பிப்.6) மாநகராட்சி அலுவலக நுழைவாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அன்பழகன், மற்றும் மாவட்ட பொருளாளர் பொன்.ஜெயராம் ஆகியோர் வருவாய்த்துறை ஊழியர்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால், கரூர் மாநகராட்சி ஆணையர் சுதா மற்றும் மாநகராட்சி மேயர் கவிதா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக விலக்கிக் கொண்டு ஊழியர்கள் பணிக்கு திரும்பினர். இந்த போராட்டத்தின் போது, கரூர் மாநகராட்சி ஆணையர் சுதா, வருவாய்த் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் குறிப்பிட்ட வரி தொகையினை வசூல் செய்து கொடுக்க வேண்டும் என ஒருமையில் பேசியதாக குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
இதுகுறித்து, கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் செய்தியாளர்களைச் சந்தித்த மாநகராட்சி ஆணையாளர் சுதா, "பிப்ரவரி 6ஆம் தேதி (நேற்று) காலை பணிக்கு செல்லாமல், போராட்டத்தில் ஈடுபட்ட போது உண்மைக்கு புறம்பான தவறான தகவல்களை ஊடகங்களுக்கு அளித்துள்ளனர்.
மேலும், மாநகராட்சி அலுவலகத்துக்குள் பணியாற்றி வரும் ஊழியர்கள் இருக்கைபணி மேற்கொள்ள குறித்த நேரத்தில் அலுவலகம் வந்து, பணிகளை முடித்து மாநகராட்சி நிர்வாகம் சிறப்பாக செயல்பட பணியாற்றி வருகின்றனர். மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் பணியாற்றும் இரு பிரிவு பணியாளர்களை, எனது குடும்பத்தில் ஒருவராக, நினைத்து வருகின்றேன்.
ஆகையால், அனைவரது பணிச்சுமையையும், மாநகராட்சியின் நிதி சுமையையும் குறைக்கும் வகையில், ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி பல்வேறு ஆலோசனைகள் மாநகராட்சி ஆணையர் என்ற அடிப்படையில் வழங்கி வருகின்றேன். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வருவாய்த்துறை வரி வசூல் நிலுவைத் தொகை குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், வரி வசூல் மிக குறைவாக உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டினேன்.
மாநகராட்சி நிர்வாகம் பொது மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர நிதி அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு, அனைத்து கள வருவாய்த்துறை பணியாளர்களும், வரி நிலுவை வைத்துள்ள பொது மக்களை சந்தித்து வரி செலுத்தும் மையங்களில் வரி செலுத்த அறிவுறுத்தபட வேண்டும் என ஆய்வுக் கூட்டத்தில் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
இதனால் வருவாய்த்துறை ஊழியர்களுக்கு எந்த கூடுதல் பணியும் வழங்கப்படவில்லை. அவர்களுக்கு வழங்கப்பட்ட பணியை சிறப்பாக செய்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதில் யாரையும் ஒருமையில் நான் பேசவில்லை. பணி இடைநீக்கம் செய்யப்பட்ட மாநகராட்சி வருவாய் துறை பணியாளர், மீண்டும் அதே இடத்தில் பணியமர்த்தப்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் வலியுறுத்தியதன் அடிப்படையில், மேல் நடவடிக்கைக்காக துறை ரீதியாக அனுப்பப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 20 மாநகராட்சிகளில், வரி குறைவாக வசூல் செய்யும் மாநகராட்சியில் கரூர் மாநகராட்சி 15-வது இடத்தில் உள்ளது. கரூர் மாநகராட்சியில் மாதம் ஒன்றுக்கு 6 கோடி ரூபாய் அளவுக்கு செலவினங்கள் உள்ளது. ஆனால் கடந்த மாதம் மொத்தம் 2 கோடி ரூபாய் கூட வரி வசூல் மேற்கொள்ளப்படவில்லை.
இதனால் மாநகராட்சியில் பணியாற்றும் 100 பணியாளர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, வருவாய்த்துறை பணியாளர்களின் சுமை குறைக்கப்பட்டு உள்ளது. ஆண்டொன்றுக்கு எண்பது கோடி அளவுக்கு வரி வசூல் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால் வெறும் 20 கோடி மட்டுமே வரி வசூல் மேற்கொள்ளப்படுகிறது. மாநகராட்சி வருவாய்த்துறை அலுவலர்களின் முக்கியப் பணி, நிலுவை உள்ள வரி தொகையை வசூல் செய்வது, மேலும் வரி விதிப்பு செய்யப்படாமல் உள்ள கட்டிடங்களை கணக்கீடு செய்து வரி விதிப்பது.
ஆகவே இந்த வழக்கமான பணிகளை அவர்கள் மேற்கொள்ள வேண்டும். ஆனால் கடந்த பத்து மாதங்களாக வருவாய்த்துறை சார்பில் சரியாக வரி வசூல் மேற்கொள்ளப்படவில்லை. வருவாய்த் துறையின் பணிச் சுமையை குறைக்கும் வகையில் மாநகராட்சி செயல்பட்டுள்ள நிலையில், மாநகராட்சி நிர்வாகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையில், வருவாய்த்துறை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது வருத்தம் அளிக்கிறது.
அனைத்து வகை பணியாளர்களுக்கும் அரசு நிர்ணயித்துள்ள விடுப்பு முறையாக வழங்கப்பட்டு வருகிறது. யாரையும் கட்டாயப்படுத்தி விடுமுறை வழங்கப்படாமல் இல்லை. இதற்கு ஆதாரமாக மாநகராட்சி ஊழியர்களின் வருகை பதிவேடு உள்ளது. அதனை செய்தியாளர்கள் பரிசோதித்து பார்க்கலாம். கரூர் மாநகராட்சிக்கு நிலுவையில் உள்ள வரித்தொகை ரூ.37.5 கோடி. நடப்பு ஆண்டில் மாநகராட்சிக்கு வசூலிக்க வேண்டிய வரித்தொகை ரூ.21.5 கோடி. மொத்தமாக 59 கோடி ரூபாய் மாநகராட்சிக்கு வரும் நிலுவைத் தொகை.
ஆனால், கடந்த பத்து மாதத்தில் மட்டும் கரூர் மாநகராட்சியில் வரித்தொகையாக ரூ.28.57 கோடி ரூபாய் மட்டுமே வசூல் ஆகி உள்ளது. மாதம் ஒன்றுக்கு 6 கோடி ரூபாய் மாநகராட்சிக்கு செலவு உள்ள நிலையில், வரி வசூல் தொகை நிலுவையாக உள்ளதால், பொதுமக்களுக்கு வடிகால் வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ள, நிதி இல்லாத சூழல் ஏற்படும். எனவே, வரி வசூல் நிலுவைத் தொகையை விரைந்து முடிக்க மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது" என்று விளக்கம் அளித்தார்.
இதையும் படிங்க: நாடாளுமன்றத் தேர்தல் 2024; இந்திய தலைமை தேர்தல் ஆணையக் குழு தமிழகத்தில் ஆலோசனை!