கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கடந்த மாதம் 18-ஆம் தேதி, சில நாட்களுக்கு முன்பு கண்ணுக்குட்டி என்பவர் விற்பனை செய்த கள்ளச்சாராயம் அருந்திய 200க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மற்றும் புதுவை ஆகிய மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில், 5 பெண்கள் உட்பட 66 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், 12 பேருக்கு கண்பார்வை முழுமையாக பறிபோய் உள்ளது. ஆபத்தான நிலையில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், புதுச்சேரி ஜிப்மர் அரசு மருத்துவமனையில் இன்னும் சிலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
மேலும், இவ்வழக்கு மீதான விசாரணையை சிபிசிஐடி மற்றும் ஒருநபர் ஆணையம் அமைத்து விசாரித்து வருகிறது. இந்த கள்ளச்சாராய வழக்கில், இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவராமன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் கள்ளக்குறிச்சி கருணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விஷ சாராயம் அருந்தி இறந்தவர்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ராணுவ வீரரை புடவையால் இறுக்கி கொலை செய்த மனைவி.. விசாரணையில் அதிர்ச்சி வாக்குமூலம்..! நடந்தது என்ன?