சென்னை: ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (27). இவர் மீது கடந்த 2020ஆம் ஆண்டு கொலை முயற்சி வழக்கு ஒன்று கடலாடி போலீசில் பதிவாகியது. இதை அடுத்து, கடலாடி போலீசார் மாரிமுத்துவை கைது செய்து விசாரணை நடத்த தேடி வந்தனர். ஆனால், போலீசார் தன்னை தேடுகிறார்கள் என்பதை அறிந்த மாரிமுத்து வெளிநாட்டிற்கு தப்பிச் சென்று தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து, ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாரிமுத்துவை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தார். அது மட்டுமல்லாமல், அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் எல்ஓசி போடப்பட்டது.
இந்த நிலையில், நேற்று இரவு ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டிலில் இருந்து ஓமன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. இதனையடுத்து, இந்த விமானத்தில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் ஆவணங்களை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் வழக்கம்போல் பரிசோதித்தனர்.
இதையும் படிங்க: நள்ளிரவில் மனம் நொந்த காங்கிரஸ் பெண் எம்பி.. பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட சென்னை ஏர்போர்ட் நிர்வாகம்!
அப்போது, இந்த விமானத்தில் கொலை முயற்சி வழக்கில் 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த மாரிமுத்துவும் வந்தார். அவருடைய பாஸ்போர்ட்டை குடியுரிமை அதிகாரிகள் கம்ப்யூட்டரில் பரிசோதித்த போது, அவர் கொலை முயற்சி வழக்கில் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என தெரிய வந்தது. இதனையடுத்து மாரிமுத்துவை வெளியில் விடாமல் குடியுரிமை அதிகாரிகள் மடக்கிப் பிடித்து, சென்னை விமான நிலைய போலீசில் ஓப்படைத்து காவலில் வைத்துள்ளனர்.
மேலும், ராமநாதபுரம் மாவட்ட போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். எனவே, கடலாடி காவல் நிலைய தனிப்படை போலீசார் மாரிமுத்துவை கைது செய்து அழைத்துச் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்து கொண்டிருக்கின்றனர்.