கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் பேரவை கூட்டத்தில், அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
கோவை, மதுரையில் தேர்தல் பணி: முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "தமிழ்நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் பணிகளை துவங்கியுள்ளோம். ஏற்கனவே வெற்றி பெற்ற கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் உடனடியாக தேர்தல் பணியை துவங்கும் வகையில் தேர்தல் பேரவை கூட்டம் நடத்துகிறோம்.
பாஜக எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை: அதிமுக மற்றும் பாஜகவை தேர்தல் களத்தில் முறியடித்து, 40 தொகுதிகளில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகள் வெற்றி பெற பணியாற்றும் வகையில் கட்சியின் அணிகளை களமிறக்கி உள்ளோம். மத்திய பாஜக அரசின் இடைக்கால பட்ஜெட் என்பது எந்த திட்டமும் இல்லாத ஏமாற்றும் பட்ஜெட்டாக உள்ளது. பாஜக தலைவர்களே அதிருப்தி தெரிவிக்கின்ற வகையில் பட்ஜெட் அமைந்திருக்கின்றது. கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அளித்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை.
பாஜக ஆட்சி சர்வதிகார ஆட்சி: பாஜக ஆட்சியில் எந்த மக்கள் நலத் திட்டமும் இல்லை. பாஜக ஆட்சியின் 10 ஆண்டுகள் என்பது மக்களின் நினைவில் இல்லாத காணாமல் போன ஆண்டுகளாக உள்ளது. செய்த பணிகளை சொல்லி மீண்டும் ஓட்டு போடுங்கள் என கேட்க தைரியமில்லாமல், அவசர அவசரமாக ராமர் கோயிலை கட்டி பிரதமர் பிரதிஷ்டை செய்துள்ளனர். ராமரை வழிபடுவதை குறை சொல்லவில்லை. ஏனெனில் எல்லா மக்களுக்கும் இறை உணர்வு, வழிபாட்டு உரிமை உள்ளது.
ஆனால் ராமரை கொண்டு வந்து வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. ராமரை அரசியலுக்காக பயன்படுத்துவதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகமான கோயில்கள் உள்ளன. மக்கள் கூட்டம் கூட்டமாக கோயிலுக்கு செல்கிறார்கள். ஆனால் பாஜகவிற்கு வாக்களிக்கமாட்டார்கள். தமிழ்நாடு பாஜக தனியாக தின்றால் ஒரு தொகுதியில் கூட டெபாசிட் கிடைக்காது. பாஜக ஆட்சி சர்வதிகார ஆட்சியாக உள்ளது.
கூடுதல் தொகுதிகளை கேட்டுப்பெறுவோம்: பத்திரிகையாளர்களை கூட இந்த அரசு சுதந்திரமாக விடவில்லை. சட்டமன்ற கூட்டத் தொடரில் ஆளுநர் தனது அதிகாரப்படி நடந்து கொள்ள வேண்டும். அதனை மீறி நடப்பது மக்களை கொச்சைப்படுத்தும் செயல். பட்ஜெட் தொடர்பாக சிபிஎம் சார்பாக சிறு கோரிக்கைகளை தமிழக அரசிடம் அளிக்க உள்ளோம். கோயம்புத்தூரில் மீண்டும் போட்டியிடுவது என்ற அடிப்படையில் இந்த கூட்டத்தை நடத்தியுள்ளோம். கூடுதல் தொகுதிகளை திமுகவிடம் கேட்டுப்பெறுவோம்.
விஜய் அரசியலுக்கு வருவது நல்லது தான்: பாஜக என்.ஐ.ஏ.வை (NIA) பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை முடமாக்குகிறது. என்.ஐ.ஏ பாஜகவிற்கு அடியாளாக செயல்படுகிறது. என்.ஐ.ஏசோதனையை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. கிட்டத்தட்ட சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்ததில் ஆட்சேபணை இல்லை. யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். அரசியலில் ஈடுபட அனைவருக்கும் உரிமை உண்டு. விஜய் அரசியலுக்கு வருவதை விமர்சிக்கவில்லை.
அவருக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கு பயன்படுத்துவது நல்லது தான். பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கு என்பது நல்ல பண்பு. நடிகர் விஜய் முழு நேர அரசியலுக்கு வருவது நல்லது தான். மக்களின் ஆதரவை பெற்று அவர் வருவதில் தவறில்லை. அவர் வரட்டும். கொள்கைகளை சொல்லட்டும். அவர் கொள்கைகளை பிரகடனப்படுத்தினால் விமர்சிக்க முடியும். பிறதொழில்களில் இருப்பவர்கள் அரசியலுக்கு வருவதை போல, சினிமாவில் இருப்பவர்களும் அரசியலுக்கு வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: “எம்ஜிஆர் போட்ட பிச்சை.. அண்ணாவை ஆட்சியில் அமர வைத்தது யார்?” - கே.சி.வீரமணி கடும் தாக்கு!