சென்னை: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தேசிய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு காவல்துறையால் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக், சட்ட விரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறி அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்து, ஜூன் 26ஆம் தேதி கைது செய்தது.
இந்த வழக்கு தொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜாபர் சாதிக்கை, நான்கு நாட்கள் அமலாக்கத்துறை காவல் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி கடந்த 19ஆம் தேதி உத்தரவிட்டது. அமலாக்கத்துறை காவல் முடிந்து இன்று (செவ்வாய்க்கிழமை) ஜாபர் சாதிக் சென்னை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜெ.சந்திரன் முன்பு ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
அப்போது, அமலாக்கத்துறை காவலில் துன்புறுத்தப்பட்டீர்களா என்று ஜாபர் சாதிக்கிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு இல்லை என ஜாபர் சாதிக் பதிலளித்தார். அதனையடுத்து, ஜூலை 29ஆம் தேதி வரை ஜாபர் சாதிக்கை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன் பின்னர், ஜாபர் சாதிக் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கில் கிறிஸ்தவ மக்கள் இயக்கம் பிரதமருக்கு மனு!