கோயம்புத்தூர்: கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் ஈஷா எதிர்ப்பு கூட்டு இயக்கம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில், சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ், தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் கு.இராமகிருஷ்ணன், பேராசிரியர் காமராசு ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் பேசுகையில், “கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி ஈஷா அறக்கட்டளையில் பணிபுரியும் டாக்டர் சரவணன் மூர்த்தி சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் மேல் விசாரணையை தொடராதது ஏன்? காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் விசாரணையை விரிவுபடுத்தாததற்கு காரணம் என்ன?
குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர் கிராமப்புற பழங்குடி பகுதிகள் மற்றும் பள்ளிகளுக்கு மொபைல் கிளினிக் என்று சென்றுள்ளார். இது காவல்துறைக்கு நன்றாகத் தெரியும். சுகாதாரத்துறை அமைச்சகம் வழங்கிய வழிகாட்டுதலின்படி, பெண் மாணவர்களை பரிசோதிக்க ஒரு பெண் மருத்துவர் கட்டாயம் இருக்க வேண்டும். இவர்கள் ஏன் பெண் மருத்துவரை நியமிக்காமல் இருந்தார்கள்?
ஈஷாவில் பல பாலியல் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டு FIR பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், புகார்தாரர் புகாரை வாபஸ் பெற்றதால் வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன்பு சிறுமி தனது புகாரை வாபஸ் பெற்றுள்ளார். ஆனால், அது சட்டத்தின் கீழ் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. பின்பு ஒரு அங்குலம் கூட வழக்கு விசாரணை நடத்தப்படவில்லை” என்றார்.
அதனைத் தொடர்ந்து, பேராசிரியர் காமராசு பேசுகையில், “என்னுடைய இரண்டு மகள்களையும் ஈஷாவில் இதுவரை பார்க்க முடியவில்லை. தற்பொழுது மகளைப் பார்க்க வேண்டும் என நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு பதிவு செய்துள்ளேன். மேலும், பெற்றோரின் அனுமதியின்றி பெயர்களை மாற்றி வைத்துள்ளனர். ஈஷாவின் வற்புறுத்தலால் நான் பொது மன்னிப்பு கேட்க வேண்டும். அப்போதுதான் தங்களுடன் பேச முடியும் என மகள்களை வைத்து மிரட்டுகிறார்கள்” என்று குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை..கோவை மருத்துவர் போக்சோவில் கைது;ஈஷா விளக்கம்!
தொடர்ந்து, தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் இராமகிருஷ்ணன் பேசுகையில், “எந்தக் கட்சி பணம் கேட்டது என்று வெளிப்படையாகக் கூற வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கான நியாயம் கிடைக்க வேண்டும். அதற்கான விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிகள் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் போராடிக் கொண்டிருக்கிறோம்” என்றார்.
இதற்கிடையே, பொது அமைதிக்கு குந்தகம் விளைக்கும் வகையில், கோவையில் செயல்பட்டு வரும் ஈஷா யோகா மையம் மீது அவதூறு கருத்துகளை பரப்புபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஈஷா யோகா மைய தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த தினேஷ், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்திருந்தார்.
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தினேஷ் கூறுகையில், “ஈஷா யோகா மையம் சார்பில் மனு அளிக்க வந்துள்ளேன். ஈஷா யோகா மையம் செய்யும் பல்வேறு நன்மையான வேலைகளுக்கும், தொண்டுகளுக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில், பல காலங்களாக சிலர் பொய்யான அவதூறுகளை பரப்பி வருகின்றனர்.
மேலும், அவர்களிடம் ஏதேனும் முகாந்திரம் இருந்தால் நீதிமன்றத்தையோ, காவல் துறையையோ அணுகி தீர்வு கண்டிருக்கலாம். ஒரு குழுவாக இணைந்து கொண்டு அவர்களது குழுவிற்கென்று ஒரு பெயரை வைத்துக் கொண்டு செயல்படுகின்றனர். எந்த ஒரு அடிப்படை ஆதாரம் இல்லாமல் சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பதிவிடுகின்றனர். உண்மைக்குப் புறம்பான செய்திகளை பரப்பி வருகின்றனர்.
அரசாங்கத்தில் வகுத்திருக்கும் முறையான அணுகுமுறைகளை அவர்கள் பின்பற்றுவதில்லை. ஈஷா யோகா மையம் சார்பில் நடத்தப்பட்ட மருத்துவர் முகாமில் எழுப்பப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு தற்போது நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதாகவும், தீர்ப்பு வரும்போது முழுமையான விவரங்கள் தெரியவரும். காமராஜ் என்பவர் தான் சமீப காலமாக தொடர்ந்து ஈஷா மீது அவதூறு பரப்பி வருகிறார். அவர்களின் இரண்டு மகள்களே ஈஷாவில் தன்னார்வலர்களாக உள்ளனர்.
காமராஜ் கடந்த வாரம் இரு முறை வந்து அவர்களது மகள்களைச் சந்தித்து இனிப்புகள் வழங்கிச் சென்றார். அதேநேரம், காமராஜ் தான் மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கிறார். அவர்கள் வந்து செல்லும் சிசிடிவி காட்சிகளும் தங்களிடம் உள்ளன. ஈஷா மீது தற்போது குற்றம்சாட்டும் நபர்கள் எவரிடமும் எந்த ஒரு முகாந்திரமும், ஆதாரமும் இல்லை” என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்