திருப்பூர்: தென்னம்பாளையம் காய்கறி சந்தை மூலம் திருப்பூர் மாவட்டம் முழுவதும் காய்கறிகள் சப்ளை செய்யப்படுகிறது. உள்ளூர் வரத்து இல்லாத நிலையில், பிற மாநிலங்களில் இருந்து மட்டுமே காய்கறிகள் வருவதால் தக்காளி, வெங்காயம் விலை உயர்வு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து தக்காளி வியாபாரி ரவி கூறுகையில், “தினந்தோறும் ஐந்தாயிரம் பெட்டி தக்காளிகள் தேவைப்படும் நிலையில், தற்பொழுது உள்ளூர் தக்காளி 200 பெட்டிகள் மட்டுமே வருகிறது. இதனால் ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து தக்காளி இறக்குமதி செய்யப்படுகிறது. இதன் காரணமாக தக்காளி விலை நிலையின்றி ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த வாரம் 40 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி, தற்பொழுது 70 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது” என்று தெரிவித்தார்.
வெங்காய வியாபாரி பிரபாகரன் கூறுகையில், “தினந்தோறும் 6 ஆயிரம் கிலோ வெங்காயம் தேவைப்படும் நிலையில், பெல்லாரி வெங்காயத்திற்கு முழுமையாக மகாராஷ்டிராவை மட்டுமே சார்ந்து இருக்க வேண்டிய சூழல் உள்ளது. மகாராஷ்டிராவில் மழை பெய்யும் காலங்களில் வெங்காயத்தின் விலை அதிகமாக உயர்ந்து விடுகிறது.
மேலும் மழை பெய்தாலும், வெங்காயம் விலை இன்னும் உயர்வதற்கு வாய்ப்புள்ளது. கடந்த வாரம் 40 ரூபாய் என விற்பனையாகி வந்த வெங்காயம், தற்பொழுது தரத்தின் அடிப்படையில் 70 முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. சின்ன வெங்காயம் கிலோ 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது” என்று கூறினார்.
இதையும் படிங்க: விவசாயிகள் இலவசமாக ஏரி, குளங்களில் மண் எடுக்க புதிய நடைமுறையை அறிவித்து தமிழக அரசு ஆணை வெளியீடு! - Tamil Nadu Government