கோயம்புத்தூர்: கோவையில் உள்ள பிரபல தொழிலதிபர்கள் வரதராஜன் மற்றும் பாலசுப்ரமணியம் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் கடந்த செவ்வாய்கிழமை முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் வரதராஜனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நிறைவடைந்த நிலையில், அஸ்வின் பேப்பர் மில் உரிமையாளர் பாலசுப்பிரமணியமிற்கு சொந்தமான இடங்களில் 4வது நாளாக சோதனை தொடர்ந்து வருகின்றது.
பாலசுப்பிரமணியம் ஈரோடு மாவட்டம் பவானியில் நடத்தி வரும் அஸ்வின் பேப்பர் மில்லிலும், கோவை சிவானந்தா காலனியில் உள்ள பேப்பர் மில் அலுவலகத்திலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் திருச்சி மாவட்டம் முசிறியில் அதிமுக பிரமுகர் இளங்கோவனுக்கு சொந்தமான எம்ஐடி கல்லூரிகளில் சோதனை ஆனது நடத்தப்பட்டது. அங்கு 3வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: "தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதா?” - உதயநிதி ஸ்டாலின் விளக்கம்!
இந்நிலையில் கோவை, ஈரோடு, திருச்சி ஆகிய இடங்களில் இளங்கோவன் தொடர்புடைய இடங்களில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில், நேற்று சென்னை உள்ள பிஎஸ்கே கட்டுமான அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த கட்டுமான நிறுவனத்தில் இரண்டாவது நாளாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக வருமானத்துறை அதிகாரிகள் கூறினர்.
இந்நிலையில் அந்த நிறுவனம் தற்பொழுது சோதனைக்கு உள்ளாகி இருக்கிறது. கோவை பாலசுப்பிரமணியத்தின் பேப்பர் மில் அலுவலகத்தில் துவங்கிய சோதனை தற்போது ஈரோடு, திருச்சி, சென்னை என விரிவடைந்து வருவதாகவும், இதில் சில ஆவணங்கள் ஆய்வுக்காக கைப்பற்ற பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இச்சோதனை இன்னும் சில தினங்களுக்கு நீடிக்கும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்