சென்னை: பல்லாவரம், திமுக எம்எல்ஏ-வின் மகன் வீட்டில் பணிபுரிந்த இளம்பெண்ணைக் கொடுமைப்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவரது மகன் மற்றும் மருமகள் மீது 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் இவ்விருவரையும் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைத்துள்ளனர்.
திருவான்மியூர் பகுதியில், பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ-வின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன், மெர்லின் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், அவர்கள் வீட்டில் பணி புரிந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது சிறுமியை அடித்துக் கொடுமைப்படுத்தி, சித்திரவதை செய்யப்பட்டதாக அவர்கள் வீட்டில் பணிபுரிந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடியோ ஒன்று வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, மருத்துவமனை மூலம் கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் நீலாங்கரை மகளிர் போலீசார் ஆண்ட்ரோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லின் ஆகியோர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டம், மிரட்டுதல், அடித்தல், ஆபாசமாகப் பேசுதல் உள்ளிட்ட ஆறு பிரிவுகள் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், திமுக எம்எல்ஏவின் மகன் ஆண்ட்ரோ மற்றும் அவரது மருமகள் மெர்லின் ஆகியோர் பிடிப்பதற்கு மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டிருப்பதாக போலீசார் தரப்பிலிருந்து இன்று (ஜன.23) தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கணவன் மனைவி இருவரும் தலைமறைவாக இருந்து வரும் நிலையில், இவர்களைப் பிடிப்பதற்குத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைத்து தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை, நேற்று வெளியாகிய நிலையில் தலைமறைவாக இருக்கும் எம்எல்ஏவின் மகன் மருமகள் முன் ஜாமீன் கோருவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனாலும், தனிப்படை போலீசார் இன்று அல்லது நாளைக்குள் அவர்களைக் கைது செய்து விடுவோம் என்ற நோக்கில் தீவிரமாக வலைவீசித் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக திமுக எம்.எல்.ஏ மகன், மருமகள் மீது வழக்குப்பதிவு!