சென்னை: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அமைக்கப்பட்ட தொகுதி பங்கீட்டு குழு மற்றும் பிரசார குழுவின் ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் என்ற முறையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அந்த வகையில் இன்று (ஜன.29) தொகுதி பங்கீட்டு குழு, தேர்தல் பிரச்சார குழு, தேர்தல் விளம்பரக் குழு கூட்டம் என மூன்று குழுக்களின் கூட்டம் நடைபெற்றது.
தேர்தல் நாள் நெருங்க நெருங்க எந்த கட்சிகளுடன் கூட்டணி என்று அறிவிக்கப்படும் வடக்கில் என்ன ஆனது?, இந்தியா கூட்டணி நெல்லிக்காய் முட்டை போல் சிதறி வருகிறது. அது போன்ற நிலை தமிழகத்திற்கும் வரும். யாரு வேண்டுமானாலும் கடைசியில் கட்சியில் சேரலாம், சேராமாலும் போகலாம். இன்னும் பல நாட்கள் உள்ளன.
உரிய நேரத்தில் தெரியவரும். ஒவ்வொரு கட்சிகளுக்கும் மாறுபட்ட கருத்துக்களும், முரண்பாடுகளும் உண்டு. இது உரிய காலம் இல்லை. உரிய காலம் வரும் போது எங்களுடன் யார் வருகிறார்கள். நாங்கள் எங்கு நிற்கிறோம் என்று சரியான நேரத்தில் தெரிய வரும். பல முறை சொல்லிவிட்டோம். அதிமுக பாஜக கூட்டணி பற்றி தூக்கத்தில் இருந்து எழுப்பி கேட்டாலும், பாஜகவுடன் ஒட்டும் இல்லை. உறவும் இல்லை.
அந்த பெட்டியை கழற்றிவிட்டாச்சு. அந்த பெட்டியை மீண்டும் சேர்ப்பதற்கான எண்ணமே கிடையாது. தேமுதிக, பாமக கட்சிகளுடன் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை என்பது கொள்கை முடிவு, நான் இப்போது சொல்ல முடியாது. அதிமுகவினர் மத்தியில் சென்று பாஜக தலைமையின் காலில் விழுவதாக என்று அண்ணாமலை நடக்காத, கற்பனையான விஷயத்தை கூறினால் மக்கள், தொண்டர்கள் என யாரும் நம்ப மாட்டார்கள்.
அண்ணா அண்ணா என ஊளை கும்மிடு போடும் நபர்கள் நாங்கள் இல்லை. யார் தவறு செய்தாலும் சரி மாநில நலனை புறக்கணிப்பவர்களை அடையாளம் காட்டுவோம். பாஜக 10 ஆண்டுகளில் மாநில உரிமைகளை புறக்கணித்ததை அடையாளப்படுத்துவோம். மாநில அரசு செய்த தவறுகளை மக்களிடம் கொண்டு செல்வோம்.
விவசாயிகள் வாழ்க்கை தரம் மேம்பட வேண்டும். விவசாயிகளின் உண்மையான தோழர் அதிமுக தான். இந்த தேர்தலில் விவசாயிகள் ஒட்டு மொத்த விரோதமும் திமுகவை சேரும். எடப்பாடி பழனிசாமி ஒரு கட்சியின் தனித்தன்மையை நிலைநாட்டி உள்ளார். ஓ.பன்னீர் செல்வம் பாஜகவின் கொத்தடிமையாக உள்ளார். இவர் போல எல்லோரும் இருக்க முடியுமா?. இந்த பேச்சு மூலம் பாஜக கொத்தடிமை அவர் என்பதை நிரூபித்து உள்ளார்.
எங்களுடன் கூட்டணி வரவில்லை என்றால் பின்விளைவு அனுபவிப்பீர்கள் என சீனிவாசன் கூறியுள்ளார். உருட்டல் மிரட்டலுக்கு பயப்படும் கட்சி அதிமுக இல்லை. பல கருணாநிதிகளை இந்த கட்சி பார்த்துள்ளது. சொல்லி விட்டு, சொல்லவில்லை என்பதை ஏற்றுகொள்ள முடியாது. ஆடு குட்டிகளை விட்டு ஆழம் பார்க்க கூடாது. அதிமுக சிங்கங்களாக வரும் நேரத்தில் அனைத்து ஆடுகளும் ஓடும் நிலை ஏற்படும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை - 21 தொகுதி ஒதுக்கீடா? முழுத் தகவல்!