தேனி: போடிநாயக்கனூர் சுற்றுப் பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் இலவம் காய் விவசாயம் நடைபெற்று வருகிறது. இதில் குரங்கணி, கொட்டகுடி, ஊத்தம்பாறை, வலசுத்துறை மற்றும் வடக்கு மலை போன்ற பகுதிகளில் இலவம் விவசாயம் பெருமளவில் நடைபெற்று வருகிறது.
சாதாரணமாக சுமார் 70 அடியில் இருந்து 80 அடி உயரம் வரை வளரும் இலவம் மரங்கள் முட்கள் நிறைந்து காணப்படுவதால், மரத்தில் ஏறி இலவங்காய் பறிக்கும் கூலித் தொழிலாளிகள் குறைந்துவிட்ட நிலையில், தற்போது உயரமான துரட்டிகள் மூலம் காய்கள் பறிக்கப்பட்டு கொண்டு வரப்படுகிறது.
பொதுவாக இலவம் பஞ்சால் தயாரிக்கப்படும் மெத்தை, தலையணைகள் மற்றும் இருக்கைகள் உடல் தட்பவெட்ப நிலையை சீராக வைத்திருக்கும் என்பதால், தமிழகத்திற்கு மட்டுமின்றி, கேரளா, கர்நாடகம், ஆந்திரா, மும்பை மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்களுக்கும், அயல் நாடுகளுக்கும் பெருமளவில் இலவம் பஞ்சு மற்றும் மெத்தை, தலையணைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
சுமார் 75க்கும் மேற்பட்ட பஞ்சுப் பேட்டைகள் மற்றும் 250க்கும் மேற்பட்ட பஞ்சு மெத்தை, தலையணைகளை உற்பத்தி செய்யும் தொழிலாளர் குடும்பங்கள் இதனை நம்பி வாழ்ந்து வருகின்றனர். கடந்த ஆண்டு கிலோ ஒன்றுக்கு ரூபாய் 45 முதல் 55 வரை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது 30 ரூபாய் வரை உயர்ந்து, 75 முதல் 85 ரூபாய் வரை பஞ்சு தரத்தை பொறுத்து கொள்முதல் செய்யப்படுகிறது.
மேலும், விதை நீக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட முதல் ரக ஏற்றுமதியில், தரம் வாய்ந்த இலவம் பஞ்சு கடந்த ஆண்டு கிலோ ஒன்றுக்கு ரூபாய் 160 முதல் 170 வரை வெளிச்சந்தையில் விற்கப்பட்ட நிலையில், தற்போது கிலோ ஒன்றுக்கு ருபாய் 50 வரை விலை அதிகரித்து, முதல் தர பஞ்சு கிலோ ஒன்றுக்கு ரூபாய் 210 முதல் 220 வரை விற்கப்படுகிறது.
சுமார் ஒரு வருட காலத்திற்குப் பின்பு இலவம் பஞ்சு விலை உயர்ந்திருந்தாலும், விவசாயிகளுக்கு இதனால் எந்த ஒரு லாபமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இலவம் பஞ்சு இருப்பு வைத்திருப்பவர்களுக்கும், கொள்முதல் வியாபாரிகளுக்கும் இந்த ஆண்டு லாபம் இருந்தாலும், கடந்த ஆண்டை விட இலவம் காய் உற்பத்தி தற்போது போதிய மழையின்மை காரணமாக குறைந்துவிட்டது.
காய் பறிப்பதற்கு தொழிலாளிகள் கிடைக்காததால், கடந்த பத்து நாட்களுக்கு முன்பு வரை விலை உயராத காரணத்தினாலும், மரங்களில் காய் பறிக்கும் ஆட்கள் சம்பளம் கட்டுபடியாகாத நிலையில், இலவம் காய்களை மரத்திலேயே விட்டு விட்ட நிலையில், வெப்பம் காரணமாக பஞ்சு வெடித்து சிதறி வீணாகிப் போனது.
திடீரென தற்போது பஞ்சு கொள்முதல் விலை உயர்ந்தாலும், விளைச்சல் குறைவு காரணமாக இந்த ஆண்டு விவசாயிகளுக்கு போதிய லாபம் இல்லாமல் போனதால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க : மீண்டும் ரூ.55 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்.. சவரனுக்கு ரூ.640 உயர்வு! - TODAY GOLD RATE CHENNAI