சென்னை: நிரலாக்கம், தரவு அமைப்புகள், படிமுறைத் தீர்வு, பைத்தான் போன்றவற்றைப் பயன்படுத்தி (Programming, Data Structures and Algorithms Using Python) அதிகளவில் எதிர்பார்க்கப்படும் படிப்புகள் உள்பட 174 தொழில்நுட்பப் படிப்புகளுக்கான பாடங்களை சென்னை ஐஐடி NPTEL தமிழில் மொழிபெயர்த்துள்ளது.
பல்வேறு துறைகளில் உள்ள பாடங்களை மொழிபெயர்ப்பு செய்வதற்காக 682 மொழிபெயர்ப்பாளர்கள், 51 தரக்கட்டுப்பாடு நிபுணர்கள் ஈடுபடுத்தப்பட்டு மொழிபெயர்ப்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இதுதவிர, மொத்தம் 159 தமிழ் இ-புத்தகங்கள் NPTEL (தேசிய தொழில்நுட்ப மேம்பாட்டு கற்றல் திட்டம்) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இதனால் தமிழில் கற்போருக்கு கூடுதல் பாடத்தொகுதிகள் கிடைப்பதுடன், 906 மணி நேரத்திற்கு வீடியோ மற்றும் ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது. NPTEL பாடங்கள் அஸ்ஸாமி, வங்காளம், குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு ஆகிய 11 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு இருக்கின்றன.
மாநில மொழிகளில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, தொழில்நுட்பக் கல்விக்காக ஆங்கிலத்திற்கு மாறும் மாணவர்களுக்கு உதவுவதே இதன் நோக்கமாகும். மேலும், NPTEL-இன் மொழி பெயர்க்கப்பட்ட பாடங்கள் பற்றிய விவரங்களை https://nptel.ac.in/translation என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
இது குறித்து NPTEL மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளரும், சென்னை ஐஐடி மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் துறையின் பேராசிரியருமான ராஜேஷ்குமார் கூறும்போது, "ஒவ்வொரு மொழிக்கும் அதற்கென தனி உலகம் உண்டு. மொழிபெயர்க்கப்பட்ட பாடங்கள் இந்தியாவில் கல்வி கற்போருக்கு கிடைக்க என்பிடெல்-ஐஐடி மெட்ராஸ் புதுமையான வழிகளைப் பின்பற்றியுள்ளது.
அறிவியல் மற்றும் பொறியியல் உள்ளடக்கத்தின் உயர்தர மொழிபெயர்ப்பில் இந்தியாவின் திறனை வளர்ப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். NPTEL என்பது, இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் நிதியுதவியுடன், கடந்த 2003ஆம் ஆண்டு ஐஐடிக்கள், ஐஐஎஸ்சிக்களின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டதாகும்.
NPTEL தனது நோக்கத்தை கணிசமாக விரிவுபடுத்தியுள்ளது. நாடு முழுவதும் எல்லோருக்கும் தரமான கல்வியை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன், ஒவ்வொரு செமஸ்டருக்கும் 22 வெவ்வேறு துறைகளில் 700க்கும் மேற்பட்ட படிப்புகளுக்கான சான்றிதழ்களை என்பிடெல் வழங்கி வருகிறது.
மொழிபெயர்க்கப்பட்ட பாடங்கள் அனைத்தும் NPTEL தரக்கட்டுப்பாடு நிபுணர்களால் கடுமையான மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு, SWAYAM, NPTEL வலைத்தளங்களில் PDF transcripts, e-books, subtitles, scrolling text, audio formats ஆகிய வடிவங்களில் இலவசமாக கிடைக்கின்றன.
தற்போது வரை, 163 பொறியியல் படிப்புகள் உள்பட 244 NPTEL படிப்புகளில் 20,000 மணி நேர வீடியோ வெற்றிகரமாக மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. துல்லியத்தை உறுதி செய்வதற்கும், ஒட்டுமொத்த கற்றல் அனுபவத்தை மேம்படுத்துவதற்கும் தொழில்நுட்பச் சொற்கள் ஆங்கிலத்தில் இடம்பெற்றுள்ளன.
மொழிபெயர்க்கப்பட்ட இந்த டிரான்ஸ்க்ரிப்ட்கள் எளிதான குறிப்புகளுக்காக புத்தகங்களாக தொகுக்கப்பட்டு இருக்கின்றன. NPTEL இணையதளத்தில், மொழிபெயர்ப்பு புத்தகங்கள் பக்கத்திலும், ஸ்வயம் இணைய முகவரியிலும் தற்போது பல்வேறு மாநில மொழிகளில் 980 புத்தகங்கள் கிடைக்கின்றன.
இதையும் படிங்க: தேனி உழவர் சந்தையில் வாக்கு சேகரித்த மு.க.ஸ்டாலின்.. கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி!