தருமபுரி: தருமபுரி ரயில் நிலையம், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட நிலையில், தருமபுரியில் இருந்து பெங்களூர் செல்லும் ரயில் பாதை 1906ஆம் ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பெங்களூரு, சேலம் பகுதியை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த ரயில் பாதை, தருமபுரி மாவட்டம் தொப்பூர், முத்தம்பட்டி காட்டுப் பகுதியில் உள்ள மலைகளைக் குடைந்து அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கடந்த இரு வருடங்களுக்கு முன்பு, இந்த ரயில் பாதை மின்சார மயமாக்கப்பட்ட நிலையில், நேற்று மத்திய அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஓசூரில் இருந்து சேலம் மாவட்டம் ஓமலூர் வரை உள்ள ஒரு வழிப் பாதையை இருவழிப் பாதையாக மாற்றப்பட உள்ளது.
இது தொடர்பாக தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டப் பிறகு, தருமபுரி ரயில் பாதையை மின்மயமாக கோரிக்கை வைத்து, அதன் பயனாக இப்பாதை மின் பாதையாக மாற்றப்பட்டு, தற்போது ரயில்கள், மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
மின் பாதையாக மாற்றப்பட்டதால்தான் வந்தே பாரத் ரயில் போன்றவை இயக்கப்படுகிறது. தொடர்ந்து நாம் ஒன்றிய அரசிடம் வேண்டுகோள் வைத்திருந்தோம். ஓசூரில் இருந்து ஓமலூர் வரை உள்ள ரயில் பாதையை, இரட்டை ரயில் பாதையாக மாற்ற வேண்டுமென தொடர் வலியுறுத்தல் காரணமாக, ஒன்றிய அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில், ஓசூர் முதல் ஓமலூர் வரை உள்ள ரயில் பாதை, இரட்டை ரயில் பாதையாக மாற்ற முதற்கட்டமாக 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நான் உயிரோடு இருக்கிறேன் - பூனம் பாண்டே வெளியிட்ட வீடியோ!
இதற்கு நடவடிக்கை எடுத்த ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்-க்கும், ரயில் அதிகாரிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டப் பிறகு, மொரப்பூர் - தருமபுரி ரயில் திட்டத்திற்குச் சென்ற நிதிநிலை அறிக்கையில் 100 கோடி ரூபாயும், தற்போது ஒசூர்- ஓமலூர் இரட்டை ரயில் பாதையாக மாற்ற நூறு கோடி ரூபாயும்,
தருமபுரி ரயில் நிலையம் மற்றும் மொரப்பூர் ரயில் நிலையத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள், தருமபுரி ரயில் நிலையத்தில் மின் தூக்கி, தருமபுரி ரயில் பாதை மின்சாரமயமாக்கல் என தொகுதி மக்களின் கோரிக்கையை நான் பதவி வகித்த இக்காலத்தில் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: AEBAS முறையால் மருத்துவர்களின் தனிநபர் பாதுகாப்பு கேள்விக்குறியாகும்.. தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்க முன்னாள் தலைவர் செந்தில்குமார்