தருமபுரி: கர்நாடகா மற்றும் கேரளா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், கர்நாடகா மாநிலத்தின் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் சமீபத்தில் முழு கொள்ளளவை எட்டியது. இதற்கிடையே, கர்நாடக மாநிலத்தில் பெய்து வந்த கனமழை கடந்த இரு தினங்களாக குறைந்தது.
அதனால், கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து நீர் வெளியேற்றுவதும் குறைந்தது. அதன் காரணமாக, இன்று காலை நிலவரப்படி, தமிழக எல்லை பகுதிக்கு வரும் நீரின் அளவு 25 ஆயிரம் கன அடியாகக் குறைந்தது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் நீர்வரத்து 75 ஆயிரம் கனஅடிலிருந்து 25 ஆயிரம் கன அடி வரை குறைந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து, இன்று காலை 8 மணி முதல் நீர்வரத்து திடீரென படிப்படியாக உயரத் தொடங்கியுள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து காலை 25 ஆயிரம் கன அடியிலிருந்து பகல் நிலவரப்படி நீர்வரத்து 66 ஆயிரம் கன அடியாக திடீரென அதிகரித்துள்ளது. அதாவது, கேரள பகுதியில் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியதன் காரணமாக, கர்நாடக அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்ததால் இன்று நண்பகல் 11 மணி நிலவரப்படி கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு வரும் தண்ணீரின் அளவும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து 80 ஆயிரம் கன அடி தண்ணீரும், மைசூர் மாவட்டம் கபினி அணையிலிருந்து 60 ஆயிரம் கன அடி தண்ணீரும் என ஒரு லட்சத்து 40 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. அதனால், தமிழ்நாட்டிற்கு வரும் நீரின் அளவு நாளை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே 15ஆவது நாளாக ஒகேனக்கல் அருவி மற்றும் மாற்றுப் பகுதியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்