தருமபுரி: கார்நாடகாவின் கிருஷ்ண ராஜ சாகர் அணை முழுவதும் நிரம்பியது. இதனால் உபரிநீர் முழுவதும் காவிரியில் திறந்துவிடப்பட்டன. இதனைத் தொடர்ந்து தமிழக எல்லையான பிலிகுண்டுலு பகுதிக்கு அதிகபட்சமாக விநாடிக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் கன தண்ணீர் வந்தது.
இதன் காரணமாக ஊட்டமலை, ஆலம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் காவிரி கரையோரம் உள்ள வீடுகள் வரை தண்ணீர் அதிகரித்தது. மேலும் ஒகேனக்கல் பகுதியில் பல்வேறு இடங்களில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
ஒகேனக்கலில் மெயின் அருவிக்குச் செல்லும் பகுதியில் சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் அருவியின் அழகைச் சுற்றுலாப் பயணிகள் ரசிக்க அமைக்கப்பட்டிருந்த தொங்கு பாலத்திற்கு செல்லும் வழியிலிருந்த இரும்பு படிக்கட்டுகள் உடைந்து சேதம் ஆகி உள்ளது.
தற்போது கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.
இருப்பினும் அருவிக்கு செல்லும் வழியில் ஏற்பட்ட சேதத்தின் காரணமாக இன்று ஒகேனக்கல் அருவி பகுதியில் குளிக்க மற்றும் பரிசல் இயக்க தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் தடையை நீட்டித்துள்ளது. தொடர்ந்து, மெயின் அருவிக்கு செல்லும் வழியில் ஏற்பட்டுள்ள சேதம் மற்றும் தொங்கு பாலத்தின் படிக்கட்டுகள் உள்ளிட்டவற்றைச் சீரமைக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒரு சில நாட்களில் பணிகள் முடிந்து ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அரசுப் பள்ளியில் 50 கிராம் கஞ்சா.. டிஐஜி பெயரில் பேக் ஐடி.. சென்னை குற்றச் செய்திகள்!