தருமபுரி: கர்நாடகா மற்றும் கேரளா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கர்நாடகா மாநிலத்தின் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் முழு கொள்ளளவை அடைந்துள்ளன. நேற்று முன்தினம் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து ஒரு லட்சம் கன அடிக்கு மேல் காவிரியாற்றில் திறந்து விடப்பட்ட நீர், நேற்று நண்பகல் முதல் தமிழக எல்லையான பிலிகுண்டுலு பகுதியை வந்து அடைந்தது.
நேற்று(வெள்ளிக்கிழமை) காலை நிலவரப்படி நீர்வரத்து 62 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில், படிப்படியாக அதிகரித்து நேற்று இரவு ஒரு லட்சம் கன அடியை தொட்டது. இன்று காலை நிலவரப்படி ஒரு லட்சத்து 15 ஆயிரம் கன அடியாகவும், 10 மணி நிலவரப்படி ஒரு லட்சத்து 20 ஆயிரம் கனஅடியாகவும் அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரித்ததால் ஒகேனக்கல் மெயின் அருவி, சினி அருவி, ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து, அருவிகள் நீரில் மூழ்கி உள்ளன.
இதனால் காவிரி கரையோரப் பகுதிகளில் வசித்து வரும் பொது மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தருமபுரி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. நீர்வரத்து அதிகரித்துக் கொண்டே இருப்பதால், காவிரி கரையோரப் பகுதிகளில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை, தீயணைப்புத் துறை மற்றும் காவல் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
ஒகேனக்கல் சுற்றலாத் தலத்தில் பரிசல் இயக்கவும், அருவிகள் மற்றும் ஆற்றங்கரை ஓரங்களில் குளிக்கவும் தொடர்ந்து 12-ஆவது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகளை பென்னாகரம் மடம் சோதனை சாவடியிலேயே தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றுப் பகுதி முழுவதும் பரந்து விரிந்த வெள்ளக் காடாகக் காட்சியளிக்கிறது. அதன் ட்ரோன் காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி வருகின்றன. காவிரியில் நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: கழுகுப் பார்வையில் ஒகேனக்கல் காவிரி ஆறு.. பிரத்யேக புகைப்படங்கள்! - Hogenakkal Cauvery river