கோவை: நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளிலும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இதனிடையே, கோவை மாநகரில் வடமாநில புலம்பெயர் தொழிலாளர்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில், திராவிட கட்சிகளில் இருந்து விடுதலை அடைய, அண்ணாமலைக்கு வாக்களிக்க வேண்டும் என இந்தி மொழியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் கே.அண்ணாமலையும், திமுக சார்பில் கோவை மாநகரட்சியின் முன்னாள் மேயர் கணபதி பி.ராஜ்குமார், அதிமுக ஐடி விங்க் மாநில தலைவர் சிங்கை ராமச்சந்திரன் உள்ளிட்ட பலரும் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், கோவை நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். அவர் தனக்கு ஆதரவாக கோவையில் வட இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் 'வட இந்திய ஒற்றுமை மையம்' என்ற பெயரில் இந்தி மொழியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
அந்த இந்தி மொழி சுவரொட்டிகளில், வட இந்திய ஒற்றுமை மன்றத்தின் அறிவுறுத்தல் என்ற பெயரில், இந்த முறை 'அனைவரும் வட இந்திய கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்' என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 'திராவிட கட்சி ஆட்சியிலிருந்து விடுதலை அடைய அண்ணாமலைக்கு வாக்களிக்க வேண்டும்' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நமது குஜராத்தின் சிங்கம் 'அண்ணாமலை' மோடிஜிக்கு முற்றிலும் விசுவாசமானவர். பாஜக ஜெயிக்கட்டும். மோடிஜி கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் ஆகியவற்றை குஜராத்துடன் சில நாட்களில் இணைப்பார். இது சாத்தியம். இந்த முறை 400 தொகுதிகளைத் தாண்டி மோடி வெற்றி பெறுவார். இது ஒரு பொன்னான வாய்ப்பு; அண்ணாமலைக்கு வாக்களியுங்கள். நமது குஜராத்துக்கு வாக்களியுங்கள். உத்தரபிரதேசத்திற்கு வாக்களியுங்கள் எனவும் ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் பாரத் மாதா கி எனவும் அந்த சுவரொட்டிகளில் இருக்கும் இந்தி மொழி வாசகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து எதிர்க்கட்சியினர் கூறுகையில் மக்களைப் பிளவுபடுத்தும் வகையில், இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்தல் நடத்தும் அதிகாரி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். மேலும் அனைத்து கட்சி சார்பிலும் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மதுரை எய்ம்ஸ் குறித்து மோடியிடம் கேட்டால் ஈபிஎஸ்-க்கு கோபம் வருவது ஏன்? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி - Minister Udhayanidhi Stalin