சென்னை: சென்னைப் பல்கலைக்கழகத்தில் வருமான வரி தாக்கல் கணக்கை முறையாக செய்யவில்லை என்கிற காரணத்தினால், 37 வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறையினர் முடக்கினர். இதனால் இந்த மாதத்திற்கான ஊதியம் கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் உள்பட 13 மாநில பல்கலைக்கழகங்களிலும் நிதி சார்ந்த பல்வேறு பிரச்னைகள் இருப்பதாக தொடர்ச்சியாக புகார்கள் பெறப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பல்கலைக்கழகங்களில் நீண்ட நாட்களாக பிரச்னையில் இருந்து வரும் கணக்கு வழக்குகள் தணிக்கை செய்யப்படாமல் இருப்பதும், பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் சம்பள முறை, ஏற்கனவே பணியாற்றி வருபவர்களை விட புதிதாக பணிகள் சேர்ந்தவர்களுக்கு கூடுதல் சம்பளம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் இருப்பது தெரிய வந்துள்ளதாகவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: “உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம்” - மதிமுக திட்டவட்டம்!
இந்த நிலையில், உள்ளாட்சி தணிக்கைத்துறை சிறப்பு இயக்குனர் உறுப்பினர் செயலராகவும், மண்டல துணை இயக்குனர் உள்ளாட்சி தணிக்கை சிறப்பு அழைப்பாளராகவும், மேலும் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் உள்ளிட்டவர்களை அடக்கிய உறுப்பினர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, மாநில பல்கலைக்கழகங்களில் தணிக்கை செய்யாமல் கிடப்பில் இருக்கும் கணக்கு வழக்குகளை இந்த குழு விசாரணை செய்து, இவற்றை முறையான வகையில் தணிக்கை செய்ய உதவும். மேலும், வருமான வரி கணக்குகளை சரியான நேரத்தில் பல்கலைக்கழகங்கள் தாக்கல் செய்கின்றனவா என்பதையும் இந்த குழு கண்காணிக்கும்.
இந்தக் குழு முழுவதும் உயர்கல்வித்துறையின் கீழ் செயல்பாட்டில் இருக்கும். மேலும், இந்தக் குழுவின் ஒவ்வொரு செயல்பாட்டையும் உயர்கல்வித்துறை கண்காணித்து, மாநில பல்கலைக்கழகங்களில் ஏற்படும் தணிக்கை பிரச்னைகளை விசாரணை செய்யும் எனவும் இந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "திமுகவினர் செய்தது தேச விரோத செயல்".. சீன ராக்கெட் விளம்பரத்திற்கு எல்.முருகன் கண்டனம்!