தென்காசி: தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் கடந்த ஆண்டை விட இவ்வாண்டு அதிகமாக உள்ளது. அந்த வகையில், கடந்த சில நாட்களாகவே தென்காசி மாவட்டத்தில் 100 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெயிலின் சுட்டெரித்து வந்தது. தற்போது தென்னிந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, மலையோரம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் படிப்படியாகக் குறைந்து மழை பெய்துவருகிறது. குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாகத் தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியில் 12 சென்டிமீட்டர் அளவுக்கு கனமழை கொட்டி தீர்த்துள்ளது.
இதனால், தென்காசி மாவட்டத்தில் உள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குளம், குட்டைகளில் தண்ணீர் நிரம்பி மறுகால் செல்கிறது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் உள்ளனர். மேலும், ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், நேற்று தென்காசி மாவட்டத்தில் பெய்த கன மழையால் 12 சென்டிமீட்டர் மழைப் பதிவாகியுள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சியில் உள்ளனர். தற்போது, தென்காசி மாவட்டம் முழுவதும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சுழல் நிலவி வருகிறது.
அதேபோல, கன்னியாகுமரி மாவட்டம் சித்தார்-I, தேனி மாவட்டம் பெரிய குளத்தில் 8 சென்டிமீட்டர் மழையும், மதுரை மாவட்டம் ஏழுமலை, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் தலா 7 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தென்காசியில் வெளுத்து வாங்கிய கனமழை.. சாலைகளில் தேங்கிய மழைநீர்!