திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே திருமலை கிராமத்தில் உள்ள ஜெயினர்மடத்தில் சமஸ்கிருதம் பயின்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது. இதில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் ஐஏஎஸ் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஐபிஎஸ் ஆகியோர் வரவேற்பு அளித்து, பூச்செண்டு வழங்கினர். மேலும், சமஸ்கிருதம் ஆகம விதிப்படி பயின்ற மாணவர்களுக்கு ஆர்.என்.ரவி சான்றிதழ்களை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து மேடையில் சிறப்புரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளுமே தனித்துவமான அம்சங்களைக் கொண்டது. தமிழ் மொழியை மாணவர்கள் தாமாக முன்வந்து கற்பதில் பெருமையும், சந்தோஷமும் அடைகிறேன். இந்த நிலையில், தமிழ் மொழியை மேம்படுத்த இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது.
நமது பிரதமர் மோடி, தமிழ் மொழியின் மீதுள்ள அதிக பற்றால் தான், மேடைகளில் பேசும் ஒவ்வொரு முறையும் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசிவருகிறார். மேலும், தமிழ் மொழியின் பெருமை மற்றும் பாரம்பரியத்தை தமிழ்நாடு மட்டுமின்றி, நாட்டில் உள்ள பிற மாநிலங்களும் அறிந்து கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தார்.