சென்னை: தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில நிதி காப்பாளரும், பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவருமான எஸ்.பாஸ்கரன் தலைமையில் காணொளி மூலம் நேற்று (பிப்.24) மாலை 6.00 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநிலத் தலைமை ஒருங்கிணைப்பாளர், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டு நடைபெற்ற நீண்ட நேர விவாதத்திற்குப் பின்பு ஒருசில தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
அதில், "10 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காகவும் மற்றும் தமிழக அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் கடந்த 15.02.2024 அன்று ஒரு நாள் அடையாள வேலை நடத்தப்போராட்டம் நடத்தப்பட்டது. அதன் பிறகு அரசு அழைப்பின் பேரில் 19.02.2024 அன்று தமிழ்நாடு முதலமைச்சரை, அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர்கள் சந்தித்து, 10 அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அளித்து கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கேட்டுக் கொண்டனர்.
இந்த நிலையில், அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கைகள் குறித்து ஒத்தி வைப்பு தீர்மானத்தை எடுத்துக் கொள்வதாக அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பினால் அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் மிகுந்த மகிழ்ச்சியோடும், தமிழ்நாடு முதலமைச்சர் மீது வைத்திருந்த மிகுந்த நம்பிக்கையோடும் இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியாகும் எனக் காத்திருந்தனர்
ஆனால், சட்டமன்ற கூட்டத்தொடர் முடியும் வரை, அரசிடம் இருந்து எவ்வித அறிவிப்பும் வெளியாகாத நிலையில், அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பைச் சார்ந்த லட்சக்கணக்கான அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினர்.
மேலும், அதன் எதிரொலியாக அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்களின் குடும்பத்தினர்கள் சிந்தித்து வாக்களிப்பது என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. இதுமட்டும் அல்லாது சி.பி.எஸ் ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் 26.02.2024 முதல் நடத்தவுள்ள காத்திருப்பு போராட்டம், சம வேலைக்குச் சம ஊதியம் கேட்டு போராட்டம் நடத்தும் SSTA அமைப்பிற்கும் அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆதரவு அளிக்கும் என ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதுமட்டும் அல்லாது, அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர் வருகின்ற 16.03.2024 அன்று சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானம் அருகில் மாபெரும் கோரிக்கை உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது எனவும் ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "ஓராயிரம் விஜய் வந்தாலும் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது" - நடிகர் ரஞ்சித் பேச்சு!