விருதுநகர்: சிவகாசி - சாத்தூர் சாலையில் கிழக்கு காவல் நிலையம் அருகே, மேட்டூர் டிரான்ஸ்போர்ட் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. தற்போது தீபாவளி நேரம் என்பதால், அதிக அளவிலான பட்டாசுகள் வெளி மாநிலங்கள் மற்றும் வெளியூர்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில், நேற்று (புதன்கிழமை) மாலை 6 மணியளவில் பட்டாசுகளை இறக்கிக் கொண்டு இருந்த போது, உராய்வு காரணமாக கம்பி மத்தாப்பு பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. விரைவாக பிற பட்டாசு பெட்டிகளுக்கும் தீ பரவி, அனைத்து பட்டாசுகளும் வெடிக்கத் தொடங்கியது. அதிக சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்ததால், நூறு அடி உயரத்திற்கு மேல் புகை எழுந்து, அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
இதையும் படிங்க: திருக்குறள் சொன்னா சர்பத் இலவசம்! பள்ளி மாணவர்களிடம் தமிழ் ஆர்வத்தை தூண்டும் ஜூஸ் கடை!
பின்னர் தகவலறிந்து வந்த சிவகாசி தீயணைப்புத் துறையினர், 3 தீயணைப்பு வாகனங்கள் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, பட்டாசுகள் வெடித்துக் கொண்டே இருந்ததால், தீயை அணைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் வெடித்து வீணானது. விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.