தஞ்சாவூர்: டெல்டா மாவட்டத்தின் மூத்த தலைவராக விளங்கியவரும், மறைந்த தமிழக அமைச்சருமான கோ.சி.மணிக்கு, ஒரு ரூபாய் கோடி மதிப்பீட்டில் திருவுருவச்சிலையுடன் மணிமண்டபம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சுமார் 6 ஆயிரம் சதுர அடி மனையில் 1,250 சதுர அடியில் திருவுருவச்சிலையுடன், பொது மக்கள் பயன்பெறும் வகையில் நூலகம் மற்றும் உடற்பயிற்சி கூடமும் அமைக்கப்பட்டு வருகிறது. இதனை வருகிற செப்டம்பர் மாதம் 13ம் தேதி கோ.சி.மணியின் பிறந்தநாளில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்க வேண்டும் என ஆடுதுறை பேரூராட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலின் தலைமையிலான குழுவினர், இது தொடர்பாக முதலமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தவுள்ளனர். இந்நிலையில், தமிழக அரசின் மின் கட்டண உயர்விற்கு எதிராக திருவிடைமருதூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வருகை தந்த பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி பிறகு ஆடுதுறைக்கு வருகை தந்து, அங்கு நடைபெற்று வரும் மணி மண்டப பணிகளை பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலின் முன்னிலையில், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.மணி கூறுகையில், "அரசியலுக்கு அப்பாற்பட்டு மறைந்த அமைச்சர் கோ.சி.மணிக்கு மணி மண்டபத்துடன் கூடிய நூலகம் மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்படுகிறது. இது பெருமைக்குரிய ஒன்றாகும்.
நாடாளுமன்ற தேர்தலில் பாமகவின் தோல்விக்கு பணம் தான் காரணம். அது அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரிந்த ஒன்று. இதன் மூலம் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டது. 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தேர்தல் நடைபெறும் சமயத்தில் கட்சித் தலைமை அறிவிக்கும்.
அது தொடர்பாக இப்போது ஏதும் கூற முடியாது. எந்த கூட்டணியில் இருப்போம், யார் தலைமை வகிப்பார்கள் என்பதை எல்லாம் ராமதாஸ் முடிவு செய்வார். அனைத்து சமுதாய மக்களுக்கும் தேவையான இட ஒதுக்கீட்டைப் பிரித்துக் கொடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி வருகின்றார்.
தொகுப்பு இட ஒதுக்கீடு முறை அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடக, மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் உள்ளது. ஆனால் சமூக நீதியின் பிறப்பிடம் என கூறக்கூடிய தமிழ்நாட்டில் இல்லை என்பதுதான் வருத்தமாக உள்ளது" என்றார்.
இதையும் படிங்க: வயநாடு நிலச்சரிவு: சேர்த்து வச்ச பணத்தை நிவாரண நிதியாக கொடுத்த பிள்ளைகள்!