மதுரை: இந்தியாவின் 78ஆவது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு, நமது பாரம்பரிய ஆடையான சேலையினை பெண்கள் அனைவரும் உடுத்திப் பாதுகாக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி, மதுரை மாவட்டத்தில் உள்ள ஒத்தக்கடையில் 'விடுதலை வாக்கத்தான்' எனும் தலைப்பில் விழிப்புணர்வு நடைப்பயணம் இன்று (ஆக.11) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் இளங்குமரன், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நடைப்பயணத்தை, முல்லைப் பெரியாறு கால்வாய் பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் மார்நாடு கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, பெண்களுக்கான சேலை வாக்கத்தான், சிறுவர்களுக்கான மெல்லோட்டம் உள்ளிட்டவை நடைபெற்றன. ஒத்தக்கடையில் துவங்கிய இந்த நடைப்பயணம் நரசிங்கம் கோயில் வரை சென்று மீண்டும் ஒத்தக்கடையை வந்தடையும் வகையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சி குறித்து சேலை வாக்கத்தான் ஏற்பாட்டாளர்கள் கூறும் பொழுது, "நமது பெண்களின் பாரம்பரிய உடையான சேலை குறித்து பொதுவான விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், இந்திய தேசத்தின் 78ஆவது சுதந்திர தினத்தின் பெருமையை பறைசாற்றுவதற்கும் இந்த வாக்கத்தான் நிகழ்வு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.
மேலும் இந்த நிகழ்ச்சியில், பங்கேற்ற சிறுவர்களுக்கு மெல்லோட்டப் போட்டியும் நடத்தி அவர்களை ஊக்குவித்துள்ளோம். ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இந்நிகழ்ச்சிக்கு பேராதரவு வழங்கியுள்ளனர்" என்று மகிழ்சிபட தெரிவித்துள்ளனர்.
இதுமட்டும் அல்லாது இந்த விடுதலை வாக்கத்தான் நிகழ்ச்சியில் 6 வயது சிறுவர்கள் முதல் 60வயது முதியவர்கள் வரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: மு.க.அழகிரி மகன் துரை தயாநிதிக்கு கொலை மிரட்டல்! போலீசார் கூறுவது என்ன?