சென்னை: அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே, சுனில் என்ற வட மாநில இளைஞர் தனது நண்பருடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களது எதிரே, போதையில் வந்த 4 இளைஞர்கள் சுனில் மற்றும் அவரது நண்பரை வழிமறித்து, ஹெட்செட் மற்றும் செல்போனை பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், அவரைத் தடுக்க முயன்ற சுனிலை, போதையில் இருந்த இளைஞர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சுனில், அருகில் உள்ள தொழிற்சாலைக்குள் ஓடி உள்ளார். ஆனால், அவரை விடாது விரட்டிச் சென்ற இளைஞர்கள், சுனிலின் வயிற்றில் கத்தியால் லேசாக கிழித்துள்ளனர். சுனிலின் அலறல் சத்தத்தைக் கேட்டு தொழிற்சாலையில் பணிபுரியும் நபர்களை ஓடிவந்து பார்த்துள்ளனர். இதனையடுத்து, அந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். மேலும், வயிற்றில் ரத்தக் கசிவுடன் இருந்த சுனில், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர், இது குறித்து வழக்குப் பதிவு செய்த அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார், வட மாநில இளைஞர் சுனிலை தாக்கி செல்போன் பறிப்பில் ஈடுபட முயன்ற அம்பத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த சச்சின் (19), ஜோயல் (18) மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனர்.
அந்த இளைஞர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், முக்கிய நபராகக் கருதப்படும் திருமங்கலத்தைச் சேர்ந்த சத்யாவையும் (20) போலீசார் கைது செய்துள்ளனர். வடமாநில இளைஞரைத் தாக்கிய 4 பேரையும், 4 மணி நேரத்தில் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இண்டிகோ விமான கழிவறையில் பதுக்கி வைத்திருந்த 4.5 கிலோ தங்கம் பறிமுதல்!