திருப்பத்தூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த அத்திமரத்துபள்ளம் பகுதியைச் சேர்ந்த சாமுடி என்பவரின் மகன்கள் ராஜேஷ் (54) ரமேஷ் (50), இருவரும் பிளம்பர் வேலை செய்து வந்தனர். நேற்று திருப்பத்தூருக்கு வேலைக்கு சென்றுவிட்டு இரவில் கிருஷ்ணகிரி திரும்பியுள்ளனர்.
கந்திலி அருகே உள்ள கள்ளேரி பகுதியில் டீசல் காலியானதால் ஜல்லி கற்கள் பாரத்துடன் ஈச்சர் லாரி சாலையோரத்தில் நின்றுள்ளது. ராஜேஷ் மற்றும் ரமேஷ் ஆகியோர் சென்ற இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக அந்த ஈச்சர் லாரி மீது அதிவேகமாக மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உடல்களை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்த கந்திலி போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலி: திருநெல்வேலி - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் ரெட்டியார்பட்டி அருகே நிகழ்ந்த விபத்தில் அக்கா - தம்பி ஆகியோர் உயிரிழந்தனர்.
கன்னியாகுமாரி மாவட்டம் குறப்புலம் விளவங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திர சிங்(50) இவரது அக்கா ஜெயந்தி(55), இவர்கள் இருவரும் இன்று அதிகாலை தங்களது காரில் மதுரையில் இருந்து சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தனர்.
அதிகாலை, திருநெல்வேலி - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் பாளையங்கோட்டை அருகே உள்ள ரெட்டியார்பட்டி நான்கு வழிச்சாலையில் சென்றபோது முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் மீது இவர்கள் சென்ற கார் மோதியதாக தெரிகிறது. இதில், காரில் இருந்த ஜெயச்சந்திர சிங் மற்றும் ஜெயந்தி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
விபத்து குறித்து அறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற பாளையங்கோட்டை போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: "நீட்டும் வேண்டாம்.. நெக்ஸ்டும் வேண்டாம் என்பது தான் தமிழ்நாட்டின் கொள்கை" - அமைச்சர் மா.சு. திட்டவட்டம்!