விழுப்புரம்: தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கண்காணிக்கும் பணியில் அப்போதைய சட்டம் - ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில் பெண் எஸ்பியை, முன்னாள் சிறப்பு டிஜிபி காரில் அழைத்துக் கொண்டு சென்றபோது பெண் எஸ்பிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக வழக்கு தொடரப்பட்டது. பெண் எஸ்பிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், கடந்த ஜூன் 16ஆம் தேதி முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸிற்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.20,500 அபராதமும் விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதனை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். பலமுறை வாதாட கால அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், நீதிமன்ற எச்சரிக்கையைத் தொடர்ந்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் 5 நாட்கள் வாதாடி தனது வாதத்தை நிறைவு செய்தார்.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பு வழக்கறிஞர் வைத்தியநாதன் தனது வாதத்தை முன் வைத்தார். அதன்படி, ஒரு நாள் மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், அரசு தரப்பு வாதம் நிறைவடைந்தது. இந்த நிலையில், வரும் 12 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்தது.
அந்த வகையில் இன்று முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸிற்கு மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் விதித்த மூன்று ஆண்டு சிறைத் தண்டனையும், ரூபாய் 20 ஆயிரத்து 500 அபராதத்தையும் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உறுதி செய்தது.
இதையும் படிங்க: ரூ.43 கோடி வசூலை நெருங்கும் ஷாகித் கபூர் நடித்த 'தேரி பாடன் மெய்ன் ஐசா உல்ஜா ஜியா'