கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் ரேஸ்கோர்ஸ் பகுதியில் சிஎஸ்ஐ மறை மாவட்ட பேராயர் திமோத்தி ரவீந்தரை சந்தித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், கோவை, பொள்ளாச்சி தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
கோவைக்கு வளர்ச்சியை அளித்தது அதிமுக: சுமார் அரை மணி நேரச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த எஸ்.பி.வேலுமணி, “கோவை மற்றும் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிகளில் அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என்பது உறுதி. அதிமுக தான் கோவையில் மிகப்பெரிய வளர்ச்சியைக் கொடுத்தது என்பது மக்களுக்குத் தெரியும். கோவை பந்தயச் சாலையில் உள்ள நடைப் பயிற்சிக்கான நடைபாதை உட்பட ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு சாலைகளை அமைத்துத் தந்து 50 ஆண்டுகள் இல்லாத வளர்ச்சியைக் கோவைக்கு அதிமுக கொடுத்துள்ளது.
பாஜக எதுவும் செய்யவில்லை: திமுக அரசு பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசும், கோவைக்காக எதுவும் செய்யவில்லை. தற்போது பாஜக வேட்பாளர் அண்ணாமலை 500 நாட்களில் 100 திட்டங்களைத் தருவதாக வாக்குறுதி தந்துள்ளார். விபரம் தெரிந்த மக்கள் யாரும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தற்போது கோவையில் சர்வதேச விமான நிலையம் அமைப்போம் என்கிறார்கள்.
திமுகவிற்கும், அதிமுகவிற்கும் தான் போட்டி: ஆனால் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபோது முதன்மை செயலாளரை நேரடியாக அழைத்து வந்து விமான நிலைய விரிவாக்கத்துக்கான நிதி ஒதுக்கி, நில எடுப்பு செய்து கொடுத்தார். ஆனால் அப்போது மத்திய அரசு எதுவுமே செய்யவில்லை என்பது இங்கு உள்ள மக்களுக்கு நன்றாகத் தெரியும். திமுகவிற்கும், அதிமுகவிற்கும் தான் போட்டி என்றுள்ள சூழலில், திமுக இப்போது களத்தில் இல்லை.
மூன்றாவது இடத்தில் பாஜக: அதேவேளையில், பாரதிய ஜனதா கட்சி மீடியா மூலமும், சமூக ஊடகங்கள் மூலமாகவும் பாஜக மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று பரப்பி வருகின்றனர். அண்ணாமலைக்குச் செல்வாக்கு இருப்பதாகவும் பரப்புகிறார்கள். மொத்தமாகவே மூன்று முதல் நான்கு சதவீதம் வாக்குகளை மட்டுமே வைத்திருக்கும் பாஜக, மூன்றாவது இடத்திற்குத் தான் தள்ளப்படும். இன்றைய தினம் அண்ணாமலைக்குச் செல்வாக்கு இருப்பதாக அவர்களே தயார் செய்து கருத்துக்கணிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளனர்.
மாயையை உருவாக்கி வருகிறார்கள்: அதில், பாஜகவின் அண்ணாமலை 38 சதவிகித வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார் என்றும், இரண்டாவது இடத்தில் 33% வாக்குகளை திமுக பெறும் என்றும், அதிமுகவைச் சேர்ந்த சிங்கை இராமச்சந்திரன் 18.5% வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடத்திற்குச் செல்வார் என்றும் பாஜகவை ஃபோக்கஸ் செய்து மீடியாவில் ஒரு மாயையை உருவாக்கி வருகிறார்கள். பாஜகவிற்கு நான்கு எம்எல்ஏக்களை வெற்றி பெறச் செய்தது அதிமுக.
ஆனைமலை - நல்லாறு திட்டம்: பாரதிய ஜனதா கட்சி முதலில் ஒவ்வொரு பூத்திருக்கும் ஆள் போடட்டும். களத்தில் அதிமுக மட்டுமே உள்ளது. குறிப்பாகக் கோவை, பொள்ளாச்சி, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுகவைச் சேர்ந்த வேட்பாளர்கள் மட்டுமே வெற்றி பெறுவார்கள். பாஜக வேட்பாளர் அண்ணாமலை, ஆனைமலை - நல்லாறு திட்டத்தைக் கொண்டு வருவோம் என தேர்தல் அறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளார்.
கிடப்பில் போடப்பட்டுள்ளது: நீண்ட காலமாக மக்கள் எதிர்பார்த்த இந்த திட்டம் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது கேரள முதலமைச்சரை அன்று அமைச்சராக இருந்த தான் உட்பட அனைவரும் நேரடியாகச் சந்தித்து ஒரு கமிட்டி ஆரம்பித்து, அந்தப் பணியை புதிய உத்வேகத்துடன் எடுத்துச் சென்றோம். ஆட்சி மாற்றத்தால் அது தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது இது குறித்துப் பேசும் அண்ணாமலை மூன்றாண்டுக் காலம் மாநில தலைவராக இருந்த போது இதை செய்திருக்க வேண்டும்.
அண்ணாமலை மக்களை ஏமாற்றுகிறார்: ஆனால், இப்போது வந்து செய்கிறேன் என்று சொல்வது ஏமாற்று வேலை. இந்த விவகாரம் என்பது இரண்டு மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சினை. பாஜக கேரளாவிற்கோ, தமிழகத்திற்கோ முதலமைச்சராக வருவதற்கு வாய்ப்பு இல்லை. அதிமுக தமிழகத்தில் ஆட்சிக்கு வரும் பொழுது ஆனைமலை - நல்லாறு திட்டம் மீண்டும் உயிர்ப்பிக்கப்படும். அண்ணாமலை மக்களை ஏமாற்றுவதைக் கண்டு ஒரு சிலர் நம்பலாம்.
அதிமுகவை அழிப்பேன், எடப்பாடியை அழிப்பேன் என்று அண்ணாமலை கூறுகிறார். ஆனால் பொன்விழா கண்ட கட்சி அதிமுக. மேல்மட்டத்தில் இருக்கும் சில பேர் அண்ணாமலையை ஆதரிப்பதாகத் தகவல் வந்துள்ளது. ஆனால் கீழ்மட்ட தொண்டர்களும், நடுநிலையாளர்களும் அதிமுகவிற்கே ஆதரவளித்து வருகிறார்கள். இதே போல் அறையில் உட்கார்ந்து கொண்டு தனக்குச் சாதகமாக கிரியேட் செய்வதை விடுத்து அண்ணாமலை களத்திற்கு வரவேண்டும். இந்த கிரியேட் செய்வதைப் பார்த்து மக்கள் ஏமாற மாட்டார்கள்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரூர் பாஜக வேட்பாளருக்காகக் களமிறங்கிய நட்சத்திர பேச்சாளர்கள்; ஒரே நாளில் தீவிர வாக்கு சேகரிப்பு! - Lok Sabha Election 2024