தூத்துக்குடி: முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 107வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள எட்டயாபுரத்தில் அதிமுக நகர செயலாளர் ராஜ்குமார் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு கலந்து கொண்டார்.
கூட்டத்தில் பேசிய அவர், "திமுக வளர்வதற்கு மிகவும் முக்கிய பங்காற்றியவர் எம்ஜிஆர் தான். அனைத்து மதங்களும் ஒன்று என்று நினைக்கக் கூடிய இயக்கம் அதிமுக, மத நல்லிணக்கத்தைப் போற்றக்கூடிய கட்சி அதிமுக மட்டும் தான். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை சரியில்லாத நிலை இருக்கிறது. 2024ஆம் ஆண்டை தாண்டுவாரா என்பதை இயற்கை தான் முடிவு செய்யும்.
அதிமுக என்ற மாபெரும் இயக்கத்திற்காகத் தவழ்ந்தும், ஒடியும் உழைத்தவர் தான் எடப்பாடி பழனிசாமி. உதயநிதி போல் எடுத்த எடுப்பிலே அமைச்சர் ஆகிவிடவில்லை. உதயநிதி அமைச்சராகும் முன்பு அவர் அமைச்சரவையில் இடம் பெற வாய்ப்பு இல்லை என்று கூறினார். ஆனால் அமைச்சர் ஆக்கப்பட்டார். தற்போது துணை முதல்வர் பதவி குறித்து வதந்தி பரப்புவதாக முதலமைச்சர் கூறுகிறார். இன்னும் ஆறு மாதத்தில் அந்த ஆட்சி நிற்காது.
இதையும் படிங்க: "ஒரே பாரதம் உன்னத பாரதம்"- தமிழ்நாடு சொந்த ஊரை போல் உணர்த்தும் - கேலோ இந்தியா தொடக்க விழாவில் மோடி பேச்சு!
பொங்கல் பரிசாக அதிமுக ஆட்சி காலத்தில் 2 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்பட்ட போது, 5 ஆயிரம் ரூபாய் கொடுங்கள் என்று கூறினார் ஸ்டாலின். ஆனால் தற்போது பொங்கல் பரிசாக ஆயிரம் வழங்கி உள்ளார்கள். நாங்கள் வழங்கிய 2,500 ரூபாய் கூட வழங்கவில்லை. சத்துணவில் அழுகிய முட்டை வழங்குவதாக புகார் குறித்து கேட்டதற்கு, அது முட்டையின் மேல் இருந்த சாயம் என்று பதில் கூறினார் விஞ்ஞானி அமைச்சர் கீதா ஜீவன்.
எவ்வளவு மழை பெய்தாலும் ஒரு சொட்டு தண்ணீருடன் நிற்காது என்று கூறினார் அமைச்சர் கீதா ஜீவன். ஆனால், கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழை நீர், தூத்துக்குடி பகுதியில் இன்றும் வடியாத நிலையில் தான் உள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்த அனைவரும் ஒருங்கிணைந்த சபதம் எடுக்க வேண்டும்" என்று கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
இதையும் படிங்க: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியா? - கனிமொழி எம்.பி. கூறியது என்ன?