தருமபுரி: தருமபுரி மாவட்ட அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் தர்மபுரி அடுத்த குண்டலப்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (ஆக.8) நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு அதிமுக மாவட்ட அவை தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார்.
மேலும், முன்னாள் அமைச்சரும் அதிமுக மாவட்ட செயலாளருமான கே.பி.அன்பழகன், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத் குமார் மற்றும் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்கள், அமைப்பு செயலாளர் உள்ளிட்டோர் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், இக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது தர்மபுரி மாவட்ட முன்னாள் அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் சங்கர் பேசும்போது, முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சரும் தற்போதைய மாவட்ட செயலாளருமான கே.பி.அன்பழகன் குறித்து கூறிய கருத்திற்கு மேடையில் இருந்தவர்கள் உடனடியாக கீழே இறங்கும்படி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, முன்னாள் அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் சங்கருடன், முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கடும் வாகுவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அதிமுக மாநில விவசாயிகள் பிரிவு அமைப்பு செயலாளர் டி.ஆர்.அன்பழகன், "அனைவருக்கும் கருத்து சொல்ல உரிமை உள்ளது அவர் கருத்துக்கு மாவட்ட செயலாளர் பதில் சொல்லலாம்" என்று சமரசம் செய்துவைத்தார்.
இதனால் டி.ஆர்.அன்பழகன் ஆதரவாளர்கள் மற்றும் கே.பி.அன்பழகன் ஆதரவாளர்கள் மேடைக்கு அருகே கூடி நின்று கோஷங்களை எழுப்பியுள்ளனர். இதன் காரணமாக, ஆலோசனைக் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அதன் பின்பு, இரு பிரிவினரும் சமாதானம் அடைந்து தொடர்ச்சியாக கூட்டத்தை நடத்தினர். இந்த நிலையில், தருமபுரி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆதரவளார்களும், மற்றுமோறு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம் தர்மபுரி அரசியல் வட்டாரங்கள் மத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: 'மகளுக்கு பீஸ் கட்ட கூட பணமில்லை'.. குடும்பத்துடன் தற்கொலை முயற்சி; வெளியான திடுக்கிடும் தகவல்!