விருதுநகர்: விருதுநகரில் மாவட்ட அதிமுக சார்பில் கட்சி நிர்வாகிகள் குழு கூட்டம் மற்றும் கட்சியினருக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. அப்போது, நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, "திமுக கூட்டணி மக்களவைத் தேர்தலில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் வெற்றியை உலகமே எதிர்பார்த்தது. தமிழகம் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் அதிமுக கூட்டணி தோல்வியடைந்ததாக தமிழக தொலைக்காட்சி ஊடகங்கள் தினம்தோறும் பட்டிமன்றங்கள் நடத்தி வருகின்றன. அதிமுக நாற்பது இடங்களிலும் வலுவான தடம் பதித்துள்ளது. திமுக என்பது ஒரு மாயை, திமுகவிற்கு தனியாக ஓட்டு வாங்கி கிடையாது.
முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் வழியில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவை பாதுகாப்பாக பார்த்து வருகிறார். அதிமுக இயக்கத்தை சிலர் சூழ்ச்சி வலை செய்து யூட்யூபில் பேசி பிரச்சனைகள் செய்து கட்சியை அழிக்கலாம் என கணக்கு போட்டால் அந்த கணக்கு நடக்காது" என பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், "நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் ஜாதி, மதத்தை வைத்து பிரித்து ஒரு பிரிவினர் அரசியல் செய்தனர். தமிழக மக்கள் யாருக்கு வாக்களித்தால் பிரச்னைகள் குறித்து பேசுவார்கள் என்பதை தற்போது சிந்திக்க தொடங்கியுள்ளனர்.
தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் ஒழிய வேண்டும், விலைவாசிகள் குறைய வேண்டும், இளைஞர்கள் மத்தியில் போதை இல்லாத தமிழகமாக மாற வேண்டும். இவை அனைத்தும் வர வேண்டும் என்றால் அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும். திமுக ஆட்சியில், அதிகாரிகள் முதல் கட்சித் தொண்டர்கள் வரை யாரும் பயப்படுவது கிடையாது.
ஆட்சியாளர்களை கண்டு குற்றவாளிகள் பயப்படாத காரணத்தினால் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. தமிழக காவல்துறையினருக்கு முழுமையாக செயல்பட அதிகாரம் வழங்கப்பட வேண்டும். தலைநகர் சென்னையில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. வரும் சட்டமன்றத் தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தில் ஏழு சட்டமன்ற தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றும்" என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "அண்மையில் கேரளாவில் நிகழ்ந்த நிலச்சரிவில் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். தமிழக மக்கள் ஜாதி, மதம் உள்ளிட்ட வித்தியாசம் இன்றி மனித நேயத்துடன் உதவிகளை செய்தனர். பேரழிவுகளை தடுக்க மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
சிவகாசியில் பட்டாசு பிரச்சனை, விருதுநகர் வியாபாரிகளுக்கு ஜிஎஸ்டி சம்பந்தமான வியாபார பிரச்சனை, அருப்புக்கோட்டை, ராஜபாளையம் பகுதிகளில் தொடரும் நெசவாளர்கள் பிரச்சனை உள்ளிட்டவற்றை அரசு கண்டு கொள்வதே கிடையாது. இவை அனைத்தும் சீர் செய்யப்பட வேண்டும் என்றால் அதிமுக ஆட்சி அமைய வேண்டும்" என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் அப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: சென்னையில் ரவுடி மீது என்கவுன்டர்! தலைநகரில் என்ன நடந்தது? - Chennai police Encounter