சென்னை: தமிழக அரசு மின் கட்டணம் உயர்த்தியதைக் கண்டித்து அதிமுக சார்பில், தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சென்னை பழைய வண்ணாரப்பேட்டை மின்ட் பேருந்து நிலையம் அருகில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ஜெயக்குமார், “திமுக அரசு 3 ஆண்டுகளில் 3 முறை சொத்து வரி, பால் விலை, மின் கட்டணத்தை ஏறக்குறைய 50 சதவீதம் அளவுக்கு மேல் உயர்த்தி பொதுமக்களை ஏமாற்றி வருகிறது. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் வேறு, இப்போதைய செயல்பாடுகள் வேறாக இருக்கிறது. தமிழகத்தில் கடந்த 200 நாட்களில் 594 கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளன. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு முற்றிலும் சீரழிந்து விட்டது.
அதிமுக திட்டங்கள் நிறுத்தம்: திமுக அரசு சர்வாதிகார அரசாக செயல்பட்டு வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் அம்மா உணவகம் பற்றி நினைக்காத முதலமைச்சர், திடீரென்று விழித்துக் கொண்டு அம்மா உணவகத்தில் ஆய்வு செய்துள்ளார். இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் வருவதால் இச்செயலில் ஈடுபட்டுள்ளார். அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டம், அம்மா குடிநீர், விலையில்லா மடிக்கணினி, அம்மா சிமெண்ட் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.
புதிய தலைமைச் செயலகம் திமுக ஆட்சியில் கட்டப்பட்டது. ஆனால், உள்ளே சென்று பார்த்தால் அது கூடாரம் போல இருந்ததால், அதிமுக ஆட்சியில் மருத்துவமனையாக மாற்றப்பட்டது. மத்திய அரசு ஊழியர்களை ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேருவது ஏற்றுக் கொள்ள முடியாது. அரசு ஊழியர்களை ஆர்எஸ்எஸ் அமைப்பினராக மாற்றும் முயற்சி இது. அரசியலுக்கு அப்பாற்பட்டு அரசு ஊழியர்கள் இருக்க வேண்டும்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்காக திமுக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் பெயர் ஏன் இடம்பெறவில்லை? என்று கேள்வி எழுப்பினார். திமுகவில் உழைப்பவருக்கு எப்போதும் அங்கீகாரம் தரப்படுவதில்லை. குடும்ப வாரிசுகளுக்கு மட்டுமே அங்கீகாரம் கிடைக்கும். தற்போது நிழல் முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இருந்து வருகிறார்.
அரசியல் அறியாத, படிக்காத உதயநிதி ஸ்டாலின், மு.க.ஸ்டாலினின் ஒரே மகன் என்ற ஒரே தகுதியைக் கொண்டு செயல்பட்டு வருகிறார். இன்பநிதியை தேர்தலில் நிறுத்தி வெற்றி பெற வைத்திருந்தால் அவரையும் துணை முதலமைச்சராக அறிவிப்பார்கள். துணை முதலமைச்சர் பதவியை துரைமுருகனுக்கு வழங்கலாம்” இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல், அதிமுக கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் அம்மன் அர்ஜுனன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், “தீபாவளிக்கு போனஸ் கொடுப்பது போன்று, திமுக அரசு மூன்று ஆண்டுகளில் மூன்று முறை போனஸ் வழங்கியுள்ளது. பாமர மக்கள் உயர வேண்டும் என்றால் சிறு குறு தொழில்கள் உயர வேண்டும். இந்த விலை உயர்வால் தமிழ்நாட்டில் உள்ள தொழிலதிபர்கள் வேறு மாநிலத்திற்கு செல்வதற்கு தயாராக உள்ளனர்” இவ்வாறு அவர் கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: ரூ.3 லட்சம் வரை வரியில்லை.. பட்ஜெட்டில் வருமான வரி குறித்த அறிவிப்பு என்ன?