சென்னை: புதுச்சேரி பாஜகவினர் வாக்கு சேகரிக்க எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகைப்படத்தை பயன்படுத்தியதற்கு கண்டணம் தெரிவித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களை பாஜக பயன்படுத்துவது கீழ்த்தரமான அரசியல் என சாடியுள்ளார்.
புதுச்சேரியில் உள்ள பா.ஜ.க நிர்வாகிகள், வாக்கு கேட்டு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படத்துடன் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், “எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களை பாஜக பயன்படுத்துவது கீழ்த்தரமான அரசியல், இது கண்டனத்திற்குறியது.
அதிமுக தலைவர்களை பயன்படுத்தி, பாஜக வாக்கு சேகரிக்க வெட்கப்பட வேண்டும். பாஜகவுக்கு கொஞ்சம் கூட வெட்கம் இல்லையா? வெட்கமே இல்லாத கட்சி. இது உங்கள் கட்சித் தலைவர்கள் மீது, உங்களுக்கே நம்பிக்கை இல்லாததை காட்டுகிறது.
எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய இரு முகங்களும் அதிமுகவுக்கு மட்டுமே சொந்தமானது. மேலும், புதுச்சேரியில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா புகைப்படங்களை போட்டு வாக்கு சேகரித்ததற்கு, புதுவை மாநில அதிமுக செயலாளர் ஏற்கனவே கண்டனம் தெரிவித்துள்ளார்” என கூறினார்.