மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், கூறைநாடு செம்மங்குளம் பகுதியில் கடந்த 2ஆம் தேதி சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வெளியான செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கூறப்படும் பகுதியில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்த மயிலாடுதுறை போலீசார், சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும், போலீசாரின் தகவலின் அடிப்படையில் வந்த வனத்துறை மற்றும் தீயணைப்புத்துறையும் இணைந்து தீவிர தேடல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில், சிறுத்தை செம்மங்குளம் பகுதியிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவைக் கடந்து ஆரோக்கியநாதபுரம் என்ற இடத்தில் பதுங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதனால், ஆரோக்கியநாதபுரத்தில் முகாமிட்டுள்ள வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் சிறுத்தையை தேடி வருகின்றனர். இதனிடையே சிறுத்தை நடமாடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதனைத் தொடர்ந்து, நேற்று (வியாழக்கிழமை) ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சிறுத்தை நடமாடுவதையொட்டி பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு காரணமாக, மயூரா மெட்ரிக் பள்ளி, புனித அந்தோனியார் உயர்நிலைப்பள்ளி, டாக்டர் அம்பேத்கர் நகராட்சி தொடக்கப்பள்ளி, சின்ன ஏரகலி நகராட்சி தொடக்கப்பள்ளி, அக்ளுர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, தூய அந்தோணியார் துவக்கப்பள்ளி, மறையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அழகு ஜோதி நர்சரி பிரைமரி ஸ்கூல், கேம் பிரிட்ஜ் ஸ்கூல் ஆகிய 9 பள்ளிகளுக்கு ஏப்ரல் 5ஆம் தேதி விடுமுறை என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அறிவித்தார்.
அதுமட்டுமின்றி, ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சுற்றித் திரியும் சிறுத்தையைப் பிடிப்பதற்கு வனத்துறை, தீயணைப்பு துறை, காவல்துறை ஆகிய துறைகளின் மூலம் 10 குழுக்கள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் சிறுத்தை பிடிக்கப்படும். மேலும், பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும். ஆகையால், பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார். அந்த வகையில் இன்று 9 பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே தேடல் பணிகள் தொடர்பாக நேற்று இரவு நாகை மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வன காவலர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் வந்துள்ளனர். சிறுத்தையை தேட 14 அதிநவீன சென்சார் பொருத்திய கேமராக்கள் காட்டுப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, சிறுத்தையை பிடிப்பதற்காக மதுரை, திருவில்லிபுத்தூர், மேகமலை ஆகிய புலிகள் காப்பகத்தில் இருந்து 3 ராட்சத கூண்டுகள், வலைகள், வனத்துறையினருக்கு பாதுகாப்பு உடைகள் உள்ளிட்ட உபகரணங்கள் வந்துள்ளது. மேலும், சிறுத்தை நடமாட்டம் உள்ள காட்டுப் பகுதியில் இந்த கூண்டுகள் மற்றும் வலைகள் வைக்கப்பட்டுள்ளது. சிறுத்தை குடியிருப்புப்பகுதிக்குள் எப்படி நுழைந்தது என்பது தொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றோம்" எனத் தெரிவித்தார்.